அவன் தவறுகளைச் செய்பவனாய்த் தானிருந்தான். ஒரு நாள் அவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை எல்லாவற்றையும் துறந்து விட்டதாய்க் கூறி காட்டுக்குப் போய்விட்டான். சில ஆண்டுகள் கழித்து நாட்டுக்கு வந்தான். ஆண்டி முதல் அரசன் வரை அவனைக் கும்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
அவனும் நல்லவை சொல்லி நல்லவை செய்தான். பொன் பொருளுக்கு ஆசைபடாமல் மக்கள் தந்ததை அவர்களுக்கே திருப்பி அளித்து வாழ்த்தி அனுப்பினான். முற்றும் துறந்த துறவி என்று அவன் புகழ் எட்டுத் திக்கும் பரவியது. அவன் புகழைக் கேள்விப்பட்டு அவன் பால்ய சிநேகிதன் ஒருவன் வந்து சேர்ந்தான். துறவியின் புகழ் அவனைப் பொறாமைப்படும் வைத்தது. ஒரு நாள் அவன் குடித்துவிட்டு வந்து நீ இப்புகழுக்கு தகுதியானவன் அன்று. நீ உன் இளம் வயதில் திருடி இருக்கிறாய். பொய் சொல்லி இருக்கிறாய். திருமணமாகாமல் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறாய். இன்று உத்தமன் போல் வேடம் போடுகிறாய். நான் நினைத்தால் உன் பெயரைக் கெடுக்க முடியும் என்றான். நான் இருபத்தைந்து ஆண்டுகளாய் எந்த தவறும் செய்யாமல் வாழ்ந்து வருகின்றேன் என்றான் துறவி. ஆனாலும் நீ இப்புகழுக்குத் தகுதியானவன் இல்லை என்றான் நண்பன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் துறவி. நீ உன் தவறுகளை மக்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றான். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே. என்றோ நடந்த தவறுக்கு யாருக்கும் தெரியாத போது யாரும் கேட்காதபோது நானே வலிய ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் . இதை வெளியில் சொல்வதால் உனக்கென்ன லாபம். நீ அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாய் இருக்கிறாய். நானோ முற்றிலும் மாறிப்போயிருக்கிறேன் என்று சொன்னான் துறவி. என்னைப் பொறுத்த வரையில் நீ பழைய ராமசாமி தான். அனைவரும் உன் காலில் விழுவதைப் பார்த்து என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றான். என்ன செய்தால் நீ பேசாமல் இருப்பாய் என்று கேட்டான் துறவி. மக்கள் உனக்குத் தரும் பொன்னையும் பொருளையும் எனக்குத் தந்துவிட வேண்டும் என்றான் நண்பன். நான் மக்களுடைய காணிக்கைகளை இல்லாதவர்களுக்கே தந்து விடுகிறேன். இதை நான் ஒரு தர்மமாகவே செய்து வருகிறேன் என்றான் துறவி. அப்படியானால் உன் புகழைத் கெடுத்து விடுவேன் என்றான் நண்பன். எனக்கு யோசனை செய்ய அவகாசம் வேண்டும் என்றான் துறவி. சரி என்றான் நண்பன்.
நள்ளிரவில் துறவி நாட்டை விட்டே போய்விட்டான். எல்லாவற்றையும் துறந்தவனுக்கும் இகழ்ச்சியை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தர்மம் தவறி வாழ்வும் மனம் இடம் தரவில்லை.
நண்பனாகப்பட்டவன், துறவி ஒரு போலித் துறவி, ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டான் என்று தூற்றிக் கொண்டு திரிந்தான்.
அதாகப்பட்டது இந்தக் கதையின் மூலம் நான் எந்த நீதியையும் சொல்ல வரவில்லை. போலிச் சாமியார்கள் நிறைந்த இக் காலத்தில் இப்படி ஒரு சாமியார் இருந்து அவனுக்கு இப்படி ஒரு நண்பனும் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இக் கதையின் மூலம் யார் யார்க்கு என்ன என்ன தர்ம நியாயங்கள் தோன்றினாலும் அவை அனைத்தும் ஏற்கக் கூடியவையே.
மனிதர்களில் இப்படிப்பட்டவர்களும் இருக்கலாம்.
இப் புதிய வேதாளம் இன்னொரு கற்பனைக் கதையை இட்டுக் கட்டிச் சொல்லும். பிடித்தால் ரசியுங்கள். பிடிக்காவிட்டால் மறந்துவிடுங்கள்.
————————அரங்க. குமார்
சென்னை-49