கடந்த காலம் (புதுக்கவிதை)
கடந்தகாலம் மீட்கமுடியாதது.
நினைவுப் பேழையில்
பதிவாகி இருந்தால்
மனத்தைப் பின்னோக்கிச்
செலுத்திப் பார்க்கலாம்.
அதில்
மோசமான துன்பங்கள்
பதிவாகி இருக்கும்.
மிகவும் இன்பமான விஷயங்கள்
பதிவாகி இருக்கும்.
சாதாரண சம்பவங்கள்
மனதின் அடித்தட்டில்
சென்றுவிடும்.
மனம் கணினியை விட
வேகமானது.
நாற்பது வருடங்களுக்கு
முன் நடந்த சம்பவமானாலும்
அடுத்த நொடியே
நினைவிற்கு வரும்.
கணினி
நாற்பது வருடங்களுக்கு முன்
நீ காதலில் தோல்வியுற்றாய்
என்ற விவரத்தைத் தரும்.
மனமோ
அன்று ஏற்பட்ட வலியைக்
காண்பிக்கும்.
ஆனால் கடந்தகாலம்
மீட்க முடியாதது.
தினமும்
நாம் சம்பாதிக்கிறோம்
என்று நினைக்கலாம்.
ஆனால்
நம்மை இழந்துகொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நொடியும்
நம்மை விட்டுப்
போய்க்கொண்டு இருக்கிறது.
அதனால்
ஒவ்வொரு நொடியும்
ஆண்டவனை நினைப்போம் என்று
ஆன்மிகவாதி சொல்லுகிறான்.
எனக்கு
ஒவ்வொரு நொடியும்
விலைமதிப்பில்லாதது என்று
விஞ்ஞானி சொல்கிறான்.
எனக்கு
ஒவ்வொரு நொடியும்
ஒருகோடி என்று
கோட்டீஸ்வரன் சொல்கிறான்.
ஒவ்வொரு நொடியும்
என் கொள்கையே சிறந்தது என்று
தலைவன் சொல்கிறான்.
ஒரு நொடிகூட
விட்டுப் பிரியலாகாது என்று
காதலர்கள் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு நொடியும்
முன்னேற வேண்டுமென்று
வெற்றிவீரன் சொல்கிறான்.
ஆனால்
நாம் பின்னோக்கிப்
பயணமாகிக் கொண்டிருக்கிறோம்.
ஆம்!
நாம் கடந்த காலமாகிக் கொண்டிருக்கிறோம்!
அதனால்
எப்பொழுதும்
செயல்பட்டுக் கொண்டே இரு.
ஒவ்வொரு நொடியும் கடந்தகாலமே!
— அரங்க. குமார்
சென்னை – 49.