வண்ணத்துப் பூச்சி (புதுக்கவிதை)

வண்ணத்துப் பூச்சி 

 

கூட்டுப் புழுவொன்று

வயசுக்கு வந்ததில்

தாவணி போட்டுக்கொண்டது.

வண்ணத்துப் பூச்சி ஆனது.

வண்ணத்துபூச்சியை யாரும்

கட்டுப்படுத்தவில்லை.

கட்டுப்படவுமில்லை.

கூட்டை விட்டு வெளியில்வந்த

வண்ணத்துப் பூச்சி உலகைப் பார்த்து வியந்தது.

அதற்கு மலரும் மணமும்  பிடித்துப் போனது.

அதோ அந்த சிவப்பு மலர்!

இதோ இந்த நீல மலர்!

அதோ அங்கே வெள்ளை மலர் என்று

மலருக்கு மலர் தாவியது.

அது மிகவும் இலேசாக இருந்ததால்

எந்த மலருக்கும் துன்பம் விளையவில்லை.

அதற்கு யாருக்கும் துன்பம் செய்யத் தெரியவில்லை.

அதற்கு வெட்டி முறிக்கும் வேலைகளில்லை.

அதற்கு எந்த சாதனைகளும்

புரியவேண்டிய அவசியமில்லை.

அதன் தேவை மிகவும் சிறியது.

வண்ணத்துப்பூச்சி மகிழ்ச்சியின் சின்னமாயிருக்கும்

அதன் இறக்கைகளை யாரும் பிய்த்துப் போடாத

வரையில்.

 

                                              ————- அரங்க குமார்.

                                                             சென்னை – 600 049.

 

படையல் (புதுக்கவிதை)

படையல்

உங்கள் வீட்டில்

சாமி கும்பிடும்போது

படையலில் காரசேவு வைக்கிறாயே

ஏன் என்றுகேட்டாள் பக்கத்துவீட்டுக்காரி.

என் வீட்டுக்காரரின் பாட்டி சாகும்போது

காரசேவு சாப்பிடணும்போல் இருக்கிறது

என்றாராம்.

வாங்கி வருகிறேன் என்று சொன்னவர்

மறந்துவிட்டாராம்.

அதற்குள் பாட்டியும் மறைந்து விட்டார்களாம்.

அதற்குத்தான் என் மாமனார்

படையலில் காராசேவு வைக்கச்சொன்னார்.

என் வீட்டுக்காரரும் அதையே செய்து வருகிறார்.

அன்னதானம் செய்கிறீர்களே எதற்கு?

என்று  கேட்டாள்.

என் மாமனார் போனபிறகு

என் மாமியாருக்கு நான் சோறு போடமாட்டேன்.

அந்தக் கிழவி

அய்யோ! பசிக்குதே! என்று

வயிற்றில் அடித்துக்கொண்டு அழும்.

காலையில் தான் இரண்டு இட்டலிகள் கொடுத்தேன்.

மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம்

சோறு சோறு என்று கேட்டால்

எங்கு போவது என்பேன்.

அந்தக் கிழவி தட்டை எடுத்துக்கொண்டு

அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் செல்லும்.

என்னை குருவியாய்ச் சாபிக்கும்.

என் வீட்டுக்காரர் பயந்த சுபாவம்.

நான் குரல் கொடுத்தால் அடங்கிவிடுவார்.

அந்த கிழவியும் போய் சேர்ந்துவிட்டாள்.

இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு

அடிக்கடி நோய் வருவது

அந்தக் கிழவியின் சாபம்தான் என்கிறார்கள்.

அதுதான் அன்னதானம் செய்கிறோம் என்றாள்.

வேட்டி தானம் செய்கிறாயே எதற்கு என்று கேட்டாள்?

எங்க அப்பாவுக்கு வெள்ளை வேட்டி என்றால்

மிகவும் இஷ்டம்?

அதனால் தான் செய்கிறேன் என்றாள்.

ஒருவர் போனபிறகு

காலம் கடந்து

அவருக்கு விருது கொடுப்பதிலும்

விருந்து கொடுப்பதிலும்

நாம் இந்நாட்டு மன்னர்கள்.

                                           ———–அரங்க. குமார்

                                                       சென்னை- 600 049.

 

நண்பன் (புதுக்கவிதை)

 நண்பன் 

 

சுடரைத் தூண்டிவிடும் கைகள்;

விளக்கின் உள்ளிருக்கும் எண்ணெய்;

அணைந்து போகாமல்

அணைத்து நிற்கும் கரங்கள்;

சுடரின் உள்ளிருக்கும் இருளை

பெரிதுபடுத்தாத மனம்;

என்னைத் தொட்டபோது சுட்டதுண்டு;

சுட்டபோதும் அணைத்ததில்லை;

அவன் என் நண்பன்.

 

                                  ———— அரங்க. குமார்

                                                 சென்னை – 600 049

மரம் (ஹைக்கூ கவிதை )

மரம் (ஹைக்கூ  கவிதை )

 

ஒன்று நிழலில் வாழ்கிறது என்றால்

ஒன்று வெய்யிலில் காய்கிறது

என்று பொருள்.

 

                             —–அரங்க. குமார்

                                   சென்னை – 600 049

 

பேதங்கள் ( புதுக்கவிதை)

பேதங்கள்  

 

ஆணென்றும் பெண்ணென்றும்

பேதங்கள் செய்வித்த

ஆண்டவனைப் போற்றவேண்டும்.

அதனால்

இல்லாததைக் கண்டு

இல்லாததைத் தேடும்

காதல்நோய்  பிறந்தது.

எனக்கு வந்த நோயை நீ தீர்ப்பாய்.

உனக்கு வந்த நோயை நான் தீர்ப்பேன்

என்ற சமரசம் பிறந்தது.

பேதங்கள் இல்லையென்றால்

சமரசம் எதற்கு.

                            ———-அரங்க. குமார்

                                         சென்னை – 600049

 

காதலின் வடிவங்கள் (புதுக் கவிதை)

காதல் பூவாய் மலரும்.

சத்தம் இருக்காது.

காணும்போதெல்லாம் பூத்து நிற்கும்.

காதல் பூத்ததனை

முகம் காட்டிவிடும்.

காதல் ஒருதலையோ ?

இருதலையோ ?

காதல் காதல் தானே.

தினம் தினம் பார்க்கத் தோன்றும்.

பாராதபோதினிலே ஏக்கந் தோன்றும்.

மனம் வாடிவிடும்.

பித்துப் பிடித்துவிடும்.

காதற்பித்தினிலே

எத்தனையோ வகைகளுண்டு;

போகின்ற வழியினை மறித்து நிற்கும்.

வலியப் பேசும்.

அர்த்தம் இருந்திடலாம்.

இல்லாமலும் போய்விடலாம்.

அடிக்கடி எதிரில் போய்நிற்கத் தோன்றும்.

தன் நல்ல குணத்தைக் காட்டி நிற்கும்.

நன்றி சொல்லும்.

திறமையைக் காட்டமுயலும்.

திறமை இருந்தால்

உயர்ந்து நிற்கும்.

இல்லையென்றால்

அசட்டுச் சிரிப்பை உதிர்க்கும்.

நான் மீண்டும் முயல்வேன் என்று சொல்லும்.

உதவும் குணம் அதிகமாக இருக்கும்.

சிலர் காதல் அறிவினை விரும்பும்.

சிலர் காதல் அறிவீனத்தை விரும்பும்.

சிலர் காதல்

தீயப்பழக்கங்களுக்கும்

நியாயம் கற்பித்துக்கொள்ளும்.

தீயவன்  நல்லவனாய்த்  தோன்றுவான்.

நல்லவன்  தீயவனாய்த் தோன்றுவான்.

சிலர் காதல் பொய்களைத் தொடர்ந்து சொல்லும்.

சிலர் காதல் மழைத் தூறல் போல் வந்து போகும்.

சிலர் காதல் ஒரே இடத்தில் நிலைக்கும்.

சிலர் காதல் போகுமிடமெல்லாம் தொடரும்.

சிலர் காதல் நீறு பூத்த நெருப்பாய் இருக்கும்.

சிலர் காதல் அச்சத்தில் மடிந்து விடும்.

காதல் புனிதமானது என்பார்கள்.

கங்கையைப் போல் பிணங்களும் மிதக்கும்.

சாக்கடை நீர் கலக்கும்.

சிலர் காதல் தோற்றுப்போனதினால்

முடிந்து போகும்.

சிலர் காதல் தியாகமாகும்.

சிலர் காதல் மாளிகையாய்க் கோபுரமாய் விரியும்.

சிலர் காதல் நோட்டுப் புத்தகத்தில்

கவிதைகளாய்ச் சிரிக்கும்.

சிலர் காதல் வாங்கித் தின்பதிலேயே கழியும்.

சிலர் காதல் வாங்கிக் கொடுப்பதிலே கழியும்.

சிலர் காதல் பணம் பார்த்து வரும்.

சிலர் காதல் உத்தியோகம் பார்த்து வரும்.

சிலர் காதல் உடற்சூட்டைத் தணித்துக்கொள்ள வரும்.

பிள்ளைப் பருவத்துக் காதல்

முதிய பருவத்துக் காதல்

என்று காதலின் வடிவங்கள் இன்னும் எத்தனையோ?

விரும்பாத பெண்ணைக் கொல்ல நினைப்பதும்

ஒருவிதக் காதல்தான் என்று

திரைப்படங்களில்

சொல்லாமல் இருந்தால் நல்லது.

 

                                                                      —- அரங்க குமார்

                                                                               சென்னை – 600 049.

                                                                                                                                         

                

மாற்றம் (புதுக்கவிதை)

மாற்றம் (புதுக்கவிதை)

 

நாளைய  பொழுது விடியக் கூடாது கடவுளே !

என்று நளாயினியும்  வேண்டலாம்.

நாளை தூக்கிலிடப்படவிருக்கும்

கைதியும் வேண்டலாம்.

ஏதோ வெறுப்பினால்

பிடித்த சங்கீதம் பிடிக்காமல் போகலாம்.

விருந்தென நாம் நினைத்த ஒருவர்

மருந்தென கசக்கலாம்.

மருந்தென கசந்தவர்

விருந்தென மாறலாம்.

உண்மை பொய்யாகலாம்.

பொய் உண்மையாகலாம்.

பொய் பிடித்துப் போகலாம்.

உண்மை கசந்து போகலாம்.

இளமையில் பிடித்தது

முதுமையில் கசக்கலாம்.

இளமையில் கசந்தது

முதுமையில் பிடிக்கலாம்.

பொட்டல்காட்டில் போதிமரம் வளரலாம்.

நேற்றும் இன்றும் ஒன்றல்ல.

இன்றும் நாளையும் ஒன்றல்ல.

நீயின்றி நானில்லை என்றவர்கள்

நீ வேறு நான் வேறு என்று பிரிந்து போகலாம்.

சுவரை எழுப்பியதும்

சுவரை இடித்ததும்

ஜெர்மன் சரித்திரம்.

வெய்யிலில் மழையை வேண்டுவதும்

மழையில் வெய்யிலை வேண்டுவதும் நாமே.

மாற்றம் ஒன்றே மாறாதது.

 

                                                  —— அரங்க. குமார்

                                                             சென்னை : 600 049.

 

 

எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]

எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]

 

இலட்சுமணன்கள்

தூங்காமல் இருப்பதால்தான்

இராமன்களும் சீதைகளும்

நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.

                                      ————அரங்க. குமார்

                                                            சென்னை – 600 049

நல்ல தீர்ப்பு எப்படிக் கிடைக்கும்? (புதுக் கவிதை)

நல்ல தீர்ப்பு எப்படிக் கிடைக்கும்?

(புதுக் கவிதை)

 

தேர்தல் புதுவெள்ளம்

ஆற்றினிலே ஓடியது.

ஒரே துறையில்

புலியும் மானும்

புறாவும் பருந்தும்

நரியும் முயலும்

நீர் குடித்தன.

 

அசைவப் புலி

சைவ மானை

நட்புடன் பார்த்தது.

மானும் தலையையாட்டிச் சிரித்தது.

புறா பருந்தை குசலம் விசாரித்தது.

நரி முயலைக் கட்டிப் பிடித்தது.

இதைப்பார்த்த மக்களெல்லாம்

ஆச்சரியப்பட்டார்கள் .

 

ஐந்து வருடங்களுக்கு முன்னர்

மான்கள் காட்டை அழிக்கின்றன

என்று  புலி

காட்டுத்  தர்பாரில் உறுமியதையும்

புலிகள் ரத்த வெறிபிடித்தவை

இவற்றைப் பிடித்து கூண்டில் போடவேண்டும்

என்று மான்கள் கூறியதையும்

மக்கள் யாரும் மறந்திருக்கவில்லை.

 

புறாக்கள்

மாடமாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும்

சொகுசாக வாழ்பவை ;

அவைகளுக்கு ஏழ்மையின் கொடுமை தெரியாது

என்று பருந்துகள் கேலிசெய்து இருந்தன.

பருந்துகள் கொலைகாரர்கள் என்று

புறாக்கள் சாடியிருந்தன.

 

முயல்கள் குழிபறிப்பவை என்று

நரிகள் நையாண்டி செய்திருந்தன.

நரிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று

முயல்கள் முழங்கி இருந்தன.

 

ஆனால் இப்பொழுது அவைகள்

வேறுவிதமாக பேசிக்கொண்டிருந்தன.

 

மான்கள்

புலியார் காட்டின் காவலர் என்றன.

அவருக்குத் தான் நாட்டை ஆளத்தெரியும் என்றன.

 

புலியாரோ

மான்கள் அகிம்சையின் தூண்கள் என்றன.

 

புறா

பருந்தார் நடக்க முடியாமல் இருந்த

ஒரு எலியை தூக்கிச் சென்று

தன் கூட்டில் விட்டுவிட்டு வந்ததை

நான் என் இருகண்களால் பார்த்ததாக

நற்சாட்சி பத்திரம் வாசித்தது.

 

முயல்

நரிகள் கூட்டத்தோடு சேர்ந்துண்ணும்

குணம் கொண்டவை என்றன.

 

நரி

முயல்கள் மற்றவர்களுக்காக

மூச்சிரைக்க ஓடியாடி வேலைசெய்பவை என்றது.  

 

மக்கள் சிரித்தார்கள்;

நாமும் இப்படித்தானே பேசுகிறோம் ;

மறப்போம் மன்னிப்போம் என்றார்கள்;

மக்கள் இப்பொழுதெல்லாம்

யாரையும் குற்றஞ்சாட்டுவதில்லை;

அவன் திருடன் என்று சொல்வதில்லை;

இன்று யார் திருடவில்லை என்கிறார்கள்;

அவன் பொய்யன் என்று சொன்னால்

யார் பொய் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள்;

 

இப்படிப்பட்டவர்கள்

தீர்ப்பெழுதினால் எப்படி

நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

                                       ————-அரங்க. குமார்

                                                      சென்னை – 600049.

 

திறமை [ புதுக் கவிதை ]

திறமை [ புதுக் கவிதை ]

 

புல்லினளவு  திறமைக்குக்

கிடைப்பது

பனிக்கிரீடமாகத் தானிருக்கும்.

கிரீடம் பெரிதாக வேண்டுமானால்

விழுதுகள் கிளைக்க நீ

ஆலெனச் சிறக்கவேண்டும்.

 

                             ———-அரங்க. குமார்

                                              சென்னை – 600 049.