All posts by Aranga Kumar
தலைக்குனிவதா? (புதுக்கவிதை)
பேனாக்கள் குனிந்ததால்தான்
‘அ’னாக்களும் ‘ஆ’வன்னாக்களும் வசமாயின.
ஒரு நல்ல செயல் செய்ய
குனிவதில் தவறில்லை.
அதற்காக தலைக்குனிந்து கொண்டே இருப்பதா?
என்று கேட்கலாம்.
வாக்கியம் முற்று பெற்றால்
புள்ளிவைக்கத்தான் வேண்டும்.
புள்ளிவைத்தபின் பேனாவை
நிமிர்த்தத்தானே வேண்டும்.
—— அரங்க குமார்.
சென்னை – 600 049.
நான் மாணவன் (புதுக்கவிதை)
நான் மாணவன்.
சாதாரணமான( ண)வன்.
அனைவரையுமே என் ஆசிரியர்களாக
எண்ணிக்கொள்கிறேன்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்றைக்
கற்றுக்கொள்கிறேன்.
எது வேண்டும் ? எது வேண்டாம்?
என்பதை மட்டுமே நான் முடிவு செய்கிறேன்.
—– அரங்க குமார்.
சென்னை – 600 049.
சுமை (புதுக்கவிதை)
இளம் வயதில்
குடும்ப சுமை தாங்க
நேர்ந்தால்
மலைக்காதே.
கவலைப்படாதே.
இளம் வயதில் சுமை தூக்க நேர்ந்தவனுக்கு
பிற்காலத்தில்
எதுவுமே சுமையாகத் தெரியாது.
இலகுவான வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு
சிறிய சுமை தூக்க நேர்ந்தாலும்
மலையாகத் தெரியும்.
அவன் மனம் சுமையாகும்.
மனம் சுமையானால்
மயிலிறகும் சுமையாகும்!
——அரங்க குமார்.
சென்னை – 600049.
சென்னை வெள்ளம் – 2015
நாளும் உவந்து தொகுத்ததனைத் தேனீக்கள்
நான்கே நிமிடத்தில் இழந்துவிடும் அறிவீர்!
வானுங் கரைந்து வீழ்ந்ததுவோ மாமழையாய்
நாமும் உறைந்து நின்றிருந்தோம் மாநகரில்
தானங் கொடுக்க கருணனுண்டு கேள்வியுற்றோம்;
தருமம் செய்தற்கு யாருமில்லை என்றிருந்தோம்;
யானுங் கொடுப்பேன் என்றுவந்து எளியோரும்
ஊனுங் கொடுத்து உவந்தாரித் தமிழகத்தில்!
…………………. 1
கீதை படிப்பவனும் தினந்தொழுகை செய்பவனும்
தூய திருச்சிலவை உள்ளத்தில் சுமப்பவனும்
பாதை முழுவதுமே மாமழைநீர் சூழ்ந்திருக்க
யாது செய்வதென நெஞ்சம் பதைத்திருக்க
வேதனை தீர்ப்பதற்கு ஆருண்டு என்றிருக்க
இந்துவிற்கு நபி கிருத்துவனுக்கு ஈசனுமாய்
பாதை நபிகள் வழியென்பார்க்கு கண்ணனுமாய்
பாதுகாத்த மக்களெல்லாம் கடவுளாவார்!
…………………. 2
எந்த வேதஞ் சொன்னாலும்
எந்த பேதஞ் சொன்னாலும்
வந்த மாம ழைதன்னில்
வாடி னோரெல் லோருமிங்கு
சொந்த மில்லா துபோனாலும்
உள்ளம் இரங்கி உதவவந்தான்
அந்த நண்ப னுமாண்டவனின்
அன்பு தூத னாவானே!
…………………. 3
………… அரங்க குமார்.
சென்னை – 600 049.
புன்னைமரப் பேய் (மரபுக்கவிதை)
புன்னைமரப் பேய் (மரபுக்கவிதை)
ஏரிக்கரைப் புன்னை மரம்
எசப்பாட்டு கேட்ட மரம்!
ஊருசனம் நியாயங் கேட்டு
ஒண்ணாகக் கூடும் மரம்!
முப்பாட்டன் கால மரம்
முத்திரையாய் நிற்கும் மரம்
பேசாமல் நிற்கும் மரம்!
பேசக்கேட்டு நின்ற மரம்!
ஊருக்குள்ளே கன்னிப் பொண்ணை
காளையொருவன் காதலிச்சான்;
ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்று
உள்ளங்களும் மாறிப் போச்சு!
ஏரிக்கரை யோரத்திலே
யாருமில்லா நேரத்திலே
வேடிக்கையாய் பேசிநிற்க
வேலைக்காரி கண்டுவிட
சாதிசனம் ஒன்றுபட
ஊருசனம் ரெண்டுபட
பாதிப்பாதி ஆனதுவே
பாசமிகு உள்ளங்களும்.
வெட்டுக்குத்து ஆகிப் போச்சு
வெடலைப்பையன் உசிரும்போச்சு!
கட்டுப்பட்ட கன்னிப்பொண்ணு
கட்டறுத்து ஓடிவந்தா!
புன்னைமரம் பார்த்திருக்க
ஊருசனம் தூங்கிவிட
புன்னைமரக் கிளையினிலே
உசிரவிட்டா கன்னிப்பொண்ணு!
சாதிப்பேய் பிடித்ததனால்
பாவிமக செத்தொழிஞ்சா
ஊருசனம் சொன்னதெல்லாம்
புன்னைமரத்தில் பேயிருக்கு!
—- அரங்க குமார்.
சென்னை – 600 049.
நெஞ்சில் பூத்த மலர் (மரபுக்கவிதை)
நெஞ்சில் பூத்த மலர் (மரபுக்கவிதை)
துள்ளிச் செல்லும் வயதில் – ஒருநாள்
துடுக்கடங்கிச் சென்றாய்;
பள்ளிச் சென்ற பொழுது – உன்னை
பார்த்தவண்ணம் நின்றேன்.
மின்னி மினுக்கும் விழிகள் – மெல்ல
விரிந்துமூடக் கண்டேன்;
கண்ணை நோக்கும் கண்கள் – அன்று
மண்ணை நோக்கக் கண்டேன்.
காலை பூத்த பூவில் – மேலும்
அழகுசேர்த்த பனிபோல்
காலைப் பார்க்கும் நாணம் – உன்றன்
கண்ணைப்பார்க்கத் தூண்டும்.
மரபில் பூத்த மலரே! – நடையில்
மாயஞ்செய்து சென்றாய்;
நினைவில்நிற்கும் வண்ணம் – என்றன்
நெஞ்சிலெழுதிச் சென்றாய்.
காலம் மாறிப் போச்சு – நம்
கனவும்மாறிப் போச்சு!
கோலம் மாறிப் போச்சு – நம்
கொள்கைமாறிப் போச்சு!
சென்று விட்ட காலம் – என்றும்
திரும்பவருவ தில்லை;
அன்று பூத்த மலரே! – இன்றும்
மனதில்வந்து செல்வாய்;
—– அரங்க குமார்
சென்னை – 600 049.
வாழ்க காதல் சாதி! (புதுக்கவிதை)
வாழ்க காதல் சாதி! (புதுக்கவிதை)
ஊருக்கு உண்மைகள் சொல்வேன்;
என் மனதில் பட்ட உண்மைகளைச் சொல்வேன்;
அந்த பாரதி துணையிருக்க வேண்டும்;
சாத்திரங்களின் பெயரைச் சொல்லி
சாதிகளைப் படைத்தாயிற்று;
அவற்றை சட்டப்படி பதிவு செய்தாயிற்று;
சாதிகளைக் காக்க
சங்கங்கள் வந்தாயிற்று;
ஒட்டுகள் வாங்க சங்கங்களின்
துணை தேவையாயிற்று;
இன்று
சாதி இல்லாமல் அரசியல் இல்லை;
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் சாதி
தேவையில்லை.
மற்ற எல்லாவற்றிற்கும் சாதி தேவைப்படுகிறது;
கவிஞர்களும் தலைவர்களும்
சாதியினைப் பழித்துவைத்தால்
அவர்கள் செத்த பின்னால் அவர்களை
நம் சாதிக்காரன் என்றிடுவோம்;
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த
தமிழ் நாட்டில் இன்று
சங்கம் அமைத்து சாதிகள் வளர்க்கின்றோம்;
சங்கம் வளர்ந்தால் ஒட்டு வங்கி வளர்கிறது;
ஒட்டுவங்கி வளர்ந்தால் சலுகைகள் கைகூடும்.
சாதிகள் சட்டமாக்கப்பட்டுவிட்ட திரு நாட்டில்
சாதிகள் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு
போடுவானேன்;
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் சாதி
தேவையில்லை;
எல்லாரும் காதலிக்க ஆரம்பித்து விட்டால்
சாதிகள் அழிந்து விடும் என்கிறீர்களா?
எல்லார்க்கும் காதல் வரும்;
ஆனால் வாயைவிட்டு வெளியில் வராது;
சிலர் தாய்தந்தை வழியில் செல்வோம் என்று
நினைப்பார்கள்;
சிலர்க்கு தைரியம் வராது;
தைரியம் வந்தாலும் வீட்டை விட்டு ஓடத்தானே
செய்கிறார்கள்;
காதலர்கள் மட்டுமே சாதி தேவை இல்லை
என்பார்கள்;
காதல் வாழ காதலர்கள் வெட்டுப்பட வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் செத்துப் போனபின்
காதல் எங்கே வாழ்கிறது?
காதல் ஆங்காங்கே பூக்கும்; காய்க்கும்; கனியும்;
சில பூவிலே உதிரும்;
சில காயிலே உதிரும்;
சில கனியிலே உதிரும்;
சில மட்டுமே சந்தைக்கு வரும்;
சில சந்தைக்கு வந்தபின் அழுகிப் போகும்;
சில மட்டும் தான் வீட்டுக்குப் போகும்;
காதல் படங்களில் ஓடும்;
காதலர்கள் ஓடுவார்கள்;
சாதி மட்டுமே நின்ற இடத்தில் நின்று
வெற்றிக் கொடி நாட்டும்;
வாழ்க சாதி! வாழ்க குலம் கோத்திரங்கள்!
வாழ்க காதல்சாதி!
வாழ்க சாதிக்காதல்!
சாதிக் யாரென்று கேட்காதீர்கள்;
சாதியைக் காதலிப்பதைத் தான்
சாதிக்காதல் என்று சொன்னேன்;
வாழ்க காதல் கவிதைகள்!
காதல் படங்கள் வெற்றி பெறட்டும்!
வாழ்க எங்கோ சில உண்மையான காதலர்கள்!
— அரங்க குமார்
சென்னை – 600 049.
காதல் மொழிகள்
காதல் மொழிகள் (புதுக்கவிதை)
எக்ஸ்ரே கதிர்கள்
என்னை ஊடுருவலாம்.
என் மனதை ஊடுருவ முடியாது.
ஆனால் உன் கண்வீசும் கதிர்களோ
என் மனதைக் குத்திக் குடைகிறதே!
காந்த ஊசி
வடதிசையைத்தான் காட்டிக்கொண்டிருக்கும்.
இதுவே நானாக இருந்தால்
நீ இருக்கும் திசையையே காட்டிக்கொண்டிருப்பேன்.
எந்தக் கப்பலும் ஊர் போய்ச்சேராது.
பட்டுப்போன மரத்தை
துளிர்க்க வைக்கும் சக்தி
பரமனுக்கு உண்டு.
பட்டுப் போன என் மனதை
துளிர்க்க வைக்கும் சக்தி
உன் ஒருவளிடம் மட்டுமே உண்டு.
என் கிளைகளை
வெட்டியிருக்கலாம்.
மீண்டும் வளர்ந்துவிடும்.
நீ என் வேர்களை அல்லவா வெட்டப்பார்த்தாய்.
மலரை
வெந்நீர் ஊற்றி
கொல்ல வேண்டிய அவசியமில்லை.
தானாகவே உதிர்ந்துவிடும்.
என் மனமும் அப்படித்தான்.
மாற்றுச் சிறுநீரகம்!
மாற்று விழிகள்!
மாற்று இதயம் கிடைக்கிறது!
மாற்று மனம்!
—- அரங்க குமார்.
சென்னை – 600 049
காதல் செய்வோம்!
காதல் செய்வோம்!
நான் உன்னைப் பார்க்கவில்லை;
நீ என்னைப் பார்க்கவில்லை;
ஊருக்குத் தெரியாது;
உற்றார்க்கும் தெரியாது;
நீ உன் வேலையைச் செய்வாய்;
நான் என் வேலையைச் செய்வேன்;
என் மகள் குனிந்த தலை நிமிரமாட்டாள் என்று
உன் அம்மா சொல்லுவாள்;
என் மகன் அக்கம் பக்கம் பார்க்க மாட்டான்;
என்று என் அம்மா சொல்லுவாள்;
நாம் கண்ணுக்குத் தெரியாத காதல் வலை
பின்னிக்கொண்டிருப்போம்;
காதல் வலை மெல்லிய துணியாக மாறும்;
அப்பொழுது மற்றவர் கண்களுக்குத் தெரியும்’
அப்பொழுது எல்லாரும் வேண்டாம் என்பார்கள்’
அப்படிச் சொன்னால் தான் அவர்கள் உறவுகள்;
இழை இறுகும்;
அறுக்கப் பார்ப்பார்கள்;
இழை இறுகிக் கம்பிகளாய் மாறும்;
வெட்டப் பார்ப்பார்கள்;
யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக
இரும்புத் தகடாய் மாறும்;
உடைக்கப் பார்ப்பார்கள்;
நாம் வீட்டை விட்டு ஒடும்போழுதுதான்
எல்லாரும் ஏளனமாய்ப் பார்ப்பார்கள்;
முதல் குட்டு உன் மேல் விழும்;
கல்யாணம் பண்ணிவைக்கிற வரையிலும்
உனக்குப் பொறுத்திருக்க முடியாதா
என்பார்கள்;
உலகம் அப்படித்தான் சொல்லும்;
காதல் வந்து விட்ட பிறகு
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது;
எத்தனை நாள் மனதுக்குள்
அடைகாத்துக் கொண்டிருப்பது;
ஒரு நாள் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு
வெளிவரத்தானே வேண்டும்;
பொறுத்திருக்கும் தவம் எல்லார்க்கும் வராது;
நமக்கென்று எந்த லட்சியமும் கிடையாது;
இலட்சியத்தைக் கட்டிக் கொண்டு
எத்தனை பேர்கள் அழுகிறார்கள்;
எனக்கு நீ வேண்டும்;
உனக்கு நான் வேண்டும்;
இதுதான் நம் லட்சியம்;
ஒருநாள் கரை உடைகிறது;
வெள்ளம் பாய்கிறது;
வெள்ளத்தின் வேகம் தணிய சில நாட்கள் போதும்;
காதலின் வேகம் தணிய சில மாதங்களாவது ஆகும்;
அப்புறம் நம்மை பற்றி யோசிப்போம்;
இன்னும் கொஞ்ச காலம்
கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாமோ ?
அதுவரையில் யாருக்கும் தெரியாமல்
தொட்டுக் கொண்டு தடவிக் கொண்டு
காலந் தள்ளி இருக்கலாமோ?
என்னவோ வெளியில் வந்து விட்டோம்;
வாழ்ந்து பார்க்கலாம்;
அதனால் தான்
சில புத்திசாலிகள்
வாழ்க்கைக்குத் தேவையானவைகளை
முன்னேற்பாடாக செய்து கொண்டு
காதலிக்க ஆரம்பிக்கிறார்களோ?
அதனால் தான் அவர்கள் அதுவரை
காதலைப் பற்றி நினைப்பதில்லையோ?
எது என்னவோ?
வெளியில் வந்து விட்டோம்;
நாமும் அவர்களும் ஒன்றா?
எனக்கும் பொறுமையில்லை;
உனக்கும் பொறுமையில்லை;
வந்து விட்டோம்;
வாழ்ந்து பார்க்கலாம்;
இனி நேரம் கிடக்கும்போது காதல் செய்வோம்!
—— அரங்க குமார்
சென்னை – 600 049.