புன்னைமரப் பேய் (மரபுக்கவிதை)

புன்னைமரப் பேய் (மரபுக்கவிதை)

 

ஏரிக்கரைப் புன்னை மரம்

       எசப்பாட்டு கேட்ட மரம்!

ஊருசனம் நியாயங் கேட்டு

       ஒண்ணாகக்  கூடும் மரம்!

 

முப்பாட்டன் கால மரம்

       முத்திரையாய் நிற்கும் மரம்

பேசாமல் நிற்கும் மரம்!

       பேசக்கேட்டு நின்ற மரம்!

 

ஊருக்குள்ளே கன்னிப் பொண்ணை

       காளையொருவன் காதலிச்சான்;

ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்று

       உள்ளங்களும் மாறிப் போச்சு!

 

ஏரிக்கரை யோரத்திலே

       யாருமில்லா நேரத்திலே

வேடிக்கையாய் பேசிநிற்க

       வேலைக்காரி கண்டுவிட

 

சாதிசனம் ஒன்றுபட

       ஊருசனம் ரெண்டுபட

பாதிப்பாதி ஆனதுவே

       பாசமிகு உள்ளங்களும்.

 

வெட்டுக்குத்து ஆகிப் போச்சு

       வெடலைப்பையன் உசிரும்போச்சு!

கட்டுப்பட்ட கன்னிப்பொண்ணு

       கட்டறுத்து ஓடிவந்தா!

 

புன்னைமரம் பார்த்திருக்க

       ஊருசனம் தூங்கிவிட

புன்னைமரக் கிளையினிலே

       உசிரவிட்டா கன்னிப்பொண்ணு!

 

சாதிப்பேய் பிடித்ததனால்

       பாவிமக செத்தொழிஞ்சா

ஊருசனம் சொன்னதெல்லாம்

       புன்னைமரத்தில் பேயிருக்கு!

 

                                 —- அரங்க குமார்.

                                         சென்னை – 600 049.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *