அப்பா ஒரு மரபுக் கவிதை [ புதுக்கவிதை]
அப்பா!
பிள்ளைகள்
சிறுவயதாய் இருக்கும்பொழுது
அவர்களுக்குக் கதாநாயகனாய்த் தோன்றி
வளர்ந்தபிறகு
வில்லனாய்த் தெரிபவர்.
வெம்மையைக் கொடுக்கும் கதிரவன்.
கதிரவன் இல்லையென்றால்
ஜனனம் எது?
வீட்டுக்குள்ளே இருக்கும் காவல் அதிகாரி.
பிள்ளைகள்
கூட்ட நெரிசலில்
மாட்டிக் கொள்ளாமல்
தோளில் சுமந்து கொள்ளும்
சுமை தாங்கி!
ரோஜா முள்!
முள் என்று மலரைக் குத்தியது?
தான் கடந்து வந்த பாதை
கரடு முரடானது என்பதால்
வேறு நல்ல பாதையை
அமைத்துக் கொடுக்க முயலும்
ஏழைப் பங்காளன்.
நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து
நம்மைவிட அதிகமாக யோசிக்கும்
அனுபவஸ்தன்.
பிள்ளைகள் சரியில்லையென்றால்
இவன் எப்படி எதிர்காலத்தில்
பிழைக்கப் போகிறான் என்று
அம்மாவுடன் கலந்தாலோசிக்கும் மந்திரி.
படியளக்கும் பரமன்.
பிள்ளையின் வாழ்க்கைச் சாலையின்
ஆரம்ப கட்டத்தில்
நில்! கவனி! செல்!
என்று வழிகாட்டும் போக்குவரத்து விளக்கு!
பிள்ளைகளுக்குச் சிரமம் தராமல்
சுமந்து செல்லும் மின்னேணி!
மாற்ற முடியாத பந்தம்.
மாறாத சொந்தம்!
நீ இப்படி இருக்க வேண்டும்!
நீ இப்படி வாழவேண்டும் என்று
இலக்கணம் சொல்வதால்
எல்லா அப்பாக்களும்
மரபுக் கவிதைகளே!
—– அரங்க. குமார். சென்னை- 600049.