கண்ணதாசன் [ புதுக் கவிதை]
நீ கவிதை மழை
பொழிந்து கொண்டிருந்தாய்!
நான் காகிதக் கப்பல் செய்து
தண்ணீரில் விட்டுக்கொண்டிருந்தேன்.
நான் கவிதைகளைப்
படிக்க ஆரம்பித்தபோது
நீ வானுலகம் போய்விட்டதாய்ச் சொன்னார்கள்!
நீ வாழ்ந்த காலத்தில் நானிருந்தேன்!
எனக்கு உன்னைத் தெரியாது!
எனக்கு உன்னைத் தெரிந்தபோது
நீ துருவ நட்சத்திரமாகிவிட்டாய்!
நான் உன் கவிதைகளில் கரைந்தேன்!
கற்பனை சுகமானது என்பார்கள்.
உன் கற்பனைகளில் நிஜமிருந்தது.
நீ உறவுகளுக்கு அன்பைச்சொன்னாய்!
காதலிக்கக் கற்றுத் தந்தாய்!
குழந்தைகளைத் தாலாட்டினாய்!
குமரர்களுக்குத் தமிழை மீட்டினாய்!
உறவைச் சொன்னாய்!
பிரிவைச் சொன்னாய்!
வெற்றியைச் சொன்னாய்!
தோல்வியைச் சொன்னாய்!
புரியாத கடவுள் தத்துவம் புரிந்தது!
எழுதத் தெரியாதவனுக்கும்
எழுதத் தோன்றியது!
பாடத் தெரியாதவன் பாடினான்!
பேசத் தெரியாதவனும் பேசினான்!
கண்ணதாசன் சென்றவழியில்
செல்லவேண்டும் என்று கிளம்பிய
இளங்கவிஞர்கள் எத்தனையோ பேர்!
நீ அன்னையிடம் வரம் வாங்கியவன்!
வார்த்தைகளுக்குத் தவம் கிடக்காதவன்
உன் நாவிலிருந்து
தேனருவி புறப்பட்டு
திரை கடலில் ஆர்ப்பரித்தது!
நீ பட்டதையும் கெட்டதையும்
பாடியதால் பட்டினத்தான்!
சந்தத்தில் அருணகிரி!
சொல்வண்ணத்தில் ஒண்கம்பன்!
உன்னோடு பேச ஆசை!
அது இயலாது என்பதனால்
தமிழோடு பேசுகிறேன்!
தமிழோடு பேசினால்
உன்னோடு பேசியது போலத்தானே!
-------- அரங்க. குமார்
சென்னை - 600 049.