Category Archives: கேரளக் கோவில்கள்

மதுரையின் பேரரசி

மதுரை அரசாளும் மீனாட்சி
Madurai Arasaalum Meenaatchi

மதுரை மாநகரம் பழம்பெருமை வாய்ந்த நகரம். முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். வைகையாற்றின் கரையில் அமைந்த நகரம். பாண்டியப் பேரரசின் தலைநகரம்.கலை நகரம். இதை கூடல் மாநகரம் என்றும் ஆலவாய் நகரம் என்றும் அழைப்பார்கள். கீழ்த் திசையின் ஏதென்ஸ் என்றும் அழைப்பார்கள். ஏனென்றால் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரம். சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் பழமையும் பன்னெடுங்காலமாக பெருமை குன்றாத பாரம்பரியமும் வாய்ந்த நகரம். மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றும் கூறலாம். அதே போன்று மதுரையும் பழமையும், பெருமையும் வாய்ந்த நகரம் ஆகும். தமிழர் நாகரிகம் வளர்ந்த இடமாகும். தமிழர்கள் வணங்கும் தெய்வமாகிய அன்னை பார்வதி தேவி, பாண்டிய மன்னன் மலயத்துவஜனுக்கும்  அவன் மனைவி காஞ்சனமாலைக்கும் மகளாகப் பிறந்து மீனாட்சி என்கிற பெயர் கொண்டு வளர்ந்து ஈடு இணையற்றப் பெண்ணரசியாகத் திகழ்ந்து மதுரையின் பேரரசியாக ஆண்டார். பின்னர் இறைவனாகிய சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து அன்னையை மணம்புரிந்து கைலாயம் சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு திரு ஆலவாயன் என்ற பெயர் உண்டாதலால் ஆலவாய் நகரம் என்ற பெயரும் ஏற்பட்டது..

             இன்று மதுரை மாநகரம் இருக்கும் இடம் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாகவும், ஒரு சமயம் வணிகன் ஒருவன் அந்தக் காட்டின் வழியே செல்லும்பொழுது தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரன் ஒரு சுயம்பு லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அதை அன்று மதுரையை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியன் என்ற மன்னனிடம் சென்று கூறினானாம். அந்த மன்னன் அந்த லிங்கத்தைக் கண்டு வழிபட்டு, அங்கிருந்த கடம்ப வனத்தை அழித்து  அங்கு ஓர்  ஆலயத்தையும் அதைச் சுற்றி தாமரை மலரின் இதழ்கள் போன்று அமைந்த ஒரு நகரத்தையும் அமைத்தானாம். அது தான் இன்றைய மதுரை மாநகரம் என்றும் மற்றொரு புராணக் கதை கூறுகிறது.

                  பழைய மதுரை லெமூரியாக் கண்டத்தில் இருந்ததாகவும் கடல்கோள் [சுனாமி] ஏற்பட்டு கடலில் மூழ்கியதால் தற்பொழுதைய மதுரை ஏற்பட்டதாகவும் இலக்கிய மற்றும் நிலவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.