நேருவும் காந்தியும் (புதுக்கவிதை)

நேரு ரோஜாவை அணிந்தார்.
காந்தி புன்னகையை அணிந்தார்.
பொதுவாழ்வில்
காந்திக்குத் தன் பிள்ளைகளை
வழிநடத்த நேரமில்லை.
காந்தி நம்மை நாமே
வழிநடத்திக் கொள்வோம் என்றார்.

அன்று
காந்தியுடன்
குழந்தை இந்திராவைப் பார்க்க முடிந்தது.
அன்று
யாருடனும்
காந்தியின் பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லை.
அவர் நினைத்திருந்தால்
போகும் இடமெல்லாம்
தன் பிள்ளைகளை அழைத்துச் சென்று
விளம்பரப்படுத்தி இருக்கலாம்.
என் வழித்தோன்றல் இவர்களென்று
கூறி இருக்கலாம்.
அவருக்கு அது தோன்றவில்லை.

நேரு
மாடி வீடு காற்று குடிசைக்கும் வீசும் என்றார்.
அவர் குடிசைக்கும் சென்றார்.
பெருமையாக இருந்தது.
காந்தி
அவர்களுடனேயே அவர்களாகவே வாழ்ந்தார்.

நேரு வெகு ஜனப் பிரியன்.
காந்தி ஹரிஜனப் பிரியன்.
காந்தி கிராமங்களை
வளர்க்கப் பார்த்தார்.
நேரு கிராமத்துச் சாலைகள்
நகரத்தை நோக்கிப் பயணப்படட்டும் என்றார்.
காந்தியின் பின்னால் நேரு நின்றார்.
நேருவின் வாரிசுகளுக்குப் பின்னால்
காந்தியின் பெயர் இருக்கிறது.
நேருவின் அன்பு நேர்மையானது.
காந்தியின் அன்பு தூய்மையானது.
எளிமையாய் வாழ்வதற்கு
கைராட்டைப் போதுமானது.
கைராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தால்
எல்லோருக்கும் நூற்று முடியாது
என்று நேரு
மேனாட்டு அறிவியலை
கீழை நாட்டுக்குக் கொண்டுவந்தார்.
காந்தி இன்றையப் பொழுதினைப் பார்த்தார்.
நேரு நாளையப் பொழுதினைப்பற்றி யோசித்தார்.
காந்தி சிக்கனவாதி.
நேரு வரவினைப் பெருக்குவோம் என்றார்.

காந்தி தன் மனதை சுயபரிசோதனை
செய்து கொள்பவர்.
நேருவுக்கு நேரமில்லை.
நேருக்கள் போன்றோர் நிறைய வருவார்கள்.
காந்தியைப் போல் வாழ்பவர் மிக அரிது!
—–அரங்க. குமார்
சென்னை – 600 049.
காந்தியும் நேருவும். வெகு பொருத்தமான இணைப்பு .