நிலாச் சோறு
பிள்ளைகள் ஒன்று கூடி
நிலாச்சோறு
ஆக்குகிற காலம் ஒன்றுண்டு.
ஒரு முழு நிலவு நாளில்
மூன்று நான்கு கற்களை வைத்து,
கொஞ்சம் சுள்ளிகள் வைத்து
அடுப்பு மூட்டி, சின்னஞ்சிறு பாத்திரம் ,
கொஞ்சம் அரிசி, சிறிது தண்ணீர்
என்று சேர்த்து அம்மா தினமும்
அடுப்படியில் செய்கின்ற சேவையினை
ஆர்வமுடன் விளையாட்டாய்
ஒத்திகைப் பார்க்கும் பெண்பிள்ளைகள்.
உடன் தம்பிகள் தங்கைகள் தோழிகள் என்று
ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு
விருந்தினரை உபசரிப்பது போல்
அவர்களுக்கு கழுவிய ஆலிலையிலோ
பூசணி இலையிலோ தாமரை இலையிலோ
கொஞ்சம் சோறு வைத்து
தங்களை அம்மாவாய் பாவித்துக் கொள்ளும்
பெண்பிள்ளைகள்.
நன்றாய் இருக்கிறதா என்று விசாரிக்க
“நன்றாய் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறதா?”
என்று கேட்க
இல்லை தீர்ந்து விட்டது என்று கூறும் பெண்பிள்ளைகள்.
அம்மா என்னவெல்லாம் சொல்வாளோ
எப்படியெல்லாம் பேசுவாளோ அவற்றையெல்லாம்
ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
செய்து பார்க்கும் ஒத்திகை.
நேரம் போவதே தெரியாமல்
விளையாடிவிட்டு
தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்பி
அம்மாவின் நினைவு வர
ஓடிப்போய் அம்மாவின்
மடியில் தலை சாய்த்துக் கொள்ளும் பிள்ளைகள்.
—– அரங்க. குமார்.
சென்னை – 600049.