கடற்கரை [ கவிதை ]

கடற்கரை [ கவிதை ]



நீலத் திரைகடலோரம் - நின்று

நெஞ்சம் மகிழ்ந்திடு நேரம்;

காலைத் தழுவியே ஓடும் - அந்த

காதல் அலைகளைப் பாரும்;


காலம்பல கடந்தாலும் - நல்ல

மாற்றம்பல நிகழ்ந்தாலும்

நீலக்கடற்கரை யோரம் - வந்து

நித்தம் அழகினைக் காண்பார்;

 

காதற்கனிரசம் பொங்க - பல

காதல் மொழிகளைப் பேச

ஆழிக்கரையினை நாடும் - இன்பக்

காதற் கிளிபல நூறு!

 

காமக்களிகளைச் செய்ய - சிலர்

வேடந் தரிப்பது உண்டு;

ஈனப்பிறவிகளாய் வந்து - இங்கு

ஈனச்செயல் புரிவார்;

 

வெட்கந்துறப்பது இங்கு - தெரு

விலங்குகளுக்குச் சரியே!

வெட்கம் இழப்பதிங்கு - நல்ல

மனிதப்பிறவி யாமோ?

 

பிள்ளைகள் ஒன்றையொன்று - துரத்திப்

பிடித்திடச் செல்வதைப்போல்

துள்ளியே அலைகள் வந்து - கரையைத்

தொட்டுவிட்டோடிச் செல்லும்;

 

ஏற்றினைத் தழுவச் செல்லும் - வீர

இளைஞர்கள் கூட்டம் போல

காற்றினால் உந்தப்பட்டு - கடல்

அலைகளும் கரையில் மோதும்.

 

துன்பங்கள் மாறிமாறி - நம்

உள்ளத்தைத் தாக்கும்போது

நெஞ்சத்தில் அலைகள்மோதும் - நம்மை

நிமிடத்தில் புரட்டிப்போடும்.

 

பிள்ளைகள் போல அலைகள் - தொட்டு

விட்டோடும்போது உள்ளந் துள்ளும்;

அள்ளியே அணைக்கத் தோன்றும் - நம்

ஆசையும் அதிகமாகும்.

 

பிள்ளைகள் உருவம் நீங்கி - பெரும்

பேயென மாறினாற்போல்

வல்லிய வேகங்கொண்டு - அலைகள்

வான்தொட வளரக்கூடும்.

 

சாதிமத பேதமின்றி - வேத

சாத்திர நெறிகளின்றி

ஆதியோடந்த மாக - நின்ற

அனைவரையும் கொண்டுபோகும்.

 

ஆழிசூழ் இயற்கையெல்லாம்

ஈசனே என்பதறிக!

அன்பினில் தாயுமாகும்- சினம்

வந்திடின் தந்தையாகும்.

 

                                                       ----- அரங்க. குமார்
                                                                                                                                   சென்னை- 600049.

நம்பிக்கை மரம் [ புதுக்கவிதை ]

நம்பிக்கை மரம் [ புதுக்கவிதை ]


கடந்து செல்லும்

மேகங்களைக் குறித்துக்

கவலைப் படவேண்டாம்.

மழை தரும் மேகங்கள்

வந்து கொண்டுதான் இருக்கும்.

காத்திருத்தல் கொடுமையானது.

காத்திருந்தால் இனிமையாகும்.

பயிர்கள் நம் நிழலில் வளர்பவை.

தினந்தினம் சீராட்டவேண்டும்.

மரங்கள் நமக்கு

நின்று பலன் தருபவை.

நம் பாட்டன் மரம் வளர்த்திருந்தால்

நாம் நிழலில் இருப்போம்.

நாம் மரம் வளர்த்தால்

நம் தலைமுறை நிழலில் இருக்கும்.

மழை தரும் மேகங்கள் வரும்வரை

நாம் மரங்களை நட்டுவிட்டு

காத்திருப்போம்.

மரங்களைக் காத்திருப்போம்.

மரங்கள் நம்பிக்கையானவை!

 

                                                                                                                                         

----- அரங்க. குமார்

சென்னை- 49.