நாளும் உவந்து தொகுத்ததனைத் தேனீக்கள்
நான்கே நிமிடத்தில் இழந்துவிடும் அறிவீர்!
வானுங் கரைந்து வீழ்ந்ததுவோ மாமழையாய்
நாமும் உறைந்து நின்றிருந்தோம் மாநகரில்
தானங் கொடுக்க கருணனுண்டு கேள்வியுற்றோம்;
தருமம் செய்தற்கு யாருமில்லை என்றிருந்தோம்;
யானுங் கொடுப்பேன் என்றுவந்து எளியோரும்
ஊனுங் கொடுத்து உவந்தாரித் தமிழகத்தில்!
…………………. 1
கீதை படிப்பவனும் தினந்தொழுகை செய்பவனும்
தூய திருச்சிலவை உள்ளத்தில் சுமப்பவனும்
பாதை முழுவதுமே மாமழைநீர் சூழ்ந்திருக்க
யாது செய்வதென நெஞ்சம் பதைத்திருக்க
வேதனை தீர்ப்பதற்கு ஆருண்டு என்றிருக்க
இந்துவிற்கு நபி கிருத்துவனுக்கு ஈசனுமாய்
பாதை நபிகள் வழியென்பார்க்கு கண்ணனுமாய்
பாதுகாத்த மக்களெல்லாம் கடவுளாவார்!
…………………. 2
எந்த வேதஞ் சொன்னாலும்
எந்த பேதஞ் சொன்னாலும்
வந்த மாம ழைதன்னில்
வாடி னோரெல் லோருமிங்கு
சொந்த மில்லா துபோனாலும்
உள்ளம் இரங்கி உதவவந்தான்
அந்த நண்ப னுமாண்டவனின்
அன்பு தூத னாவானே!
…………………. 3
………… அரங்க குமார்.
சென்னை – 600 049.