ஏழையின் புலம்பல்! [ புதுக்கவிதை ]

அட நாயே!
நீ இந்த
ஏழைக் குடிசையில்
எதைக் காப்பாற்ற
இரவெல்லாம் குரைக்கிறாய்?
உனக்குச் சோற்றைப் போட்டதற்கு
எங்களுக்கு இருக்கின்ற
ஒரேசொத்தான
தூக்கத்தையும் அல்லவா
கொள்ளை போகவிடுகிறாய்!
என்று
நாளெல்லாம் உழைத்துக்
களைத்துப் படுத்திருந்த
அந்த கூலிக்காரன் புலம்பினான்!

—-அரங்க. குமார்
சென்னை- 600 049.

உன் பார்வை (புதுக்கவிதை)

பனிப்போர்வையடி உன்னுருவம் – உன்னைப்
பார்த்தாலே மற்றவைகள் மங்கிப்போகும்;
தனிப்பார்வையடி உன்பார்வை – வெம்மை
தணியாதோ தகிக்கிறதே செங்கதிராய்!

கனிக்கோவையடி உன்னிதழ்கள் – கிளி
கண்டாலே கொத்திடுமே கவனங்கொள்க!
தமிழ்ப்பாவையடி நீயெனக்கு – என்னைத்
தருவேனே கவியெனவே மறுத்திடாதே!

விழிப்பார்வையிலே கொன்றுவிட்டு – உயிர்
மீட்டிடுவாய் புன்னகையால்
கவிப்பார்வையிலே பிரமனும்நீ – கொடுங்
காலனும்நீ என்றுரைப்பேன்;

நிலவெனவும் கதிரெனவும் – உன்
நீள்விழிகள் மாறுவதேன்?
குலவுகிற நேரமிது – உனக்குக்
குடைப்பிடிக்க நேரமில்லை!

களவெனவும் கற்பெனவும் – தொல்
காப்பியத்துள் கண்டதடி!
உளந்தனிலே புரியவில்லை! – நீ
ஓர்நொடியில் புரியவைத்தாய்.

கற்றுத் தெளிவதில்லை காதல்!
கல்லாமல் கற்பதுவே!
கற்றபின் மறப்பதில்லை காதல்!
காலமெல்லாம் கூடவரும்!

—அரங்க. குமார்