வெண்ணிலாவும் விண்மீன்களும் ( புதுக்கவிதை )

வெண்ணிலாவும் விண்மீன்களும்  ( புதுக்கவிதை )

 

விண்மீன்கள்

மாதமொரு அப்பத்தை

மெதுவாய்த் தின்னும்

எறும்புக் கூட்டம்.

 

வெண்ணிலவே !

உன்முகத்தில் உள்ள கறை

பருவத்தில்

உன் முகத்தில் பருக்கள்

தோன்றி மறைந்த கறையோ?

 

கோடிக்கணக்கில்

அனாதைக் குழந்தைகள்!

ஒரு கிண்ணத்தில்

பால் சோறு!

போதுமா?

 

வெண்ணிலவே!

நீயென்ன

அரசியல் தலைவியா?

இரவு முழுவதும்

கூட்டம் போடுகிறாய்.

 

சாப்பிட்டு முடித்து

வீட்டின் முன் வெட்டவெளியில்

பாய்விரித்துப் படுத்த கணவன்

பக்கத்தில் வந்தமர்ந்த

மனைவியிடம் கேட்டான்:

ஏனடி! நேற்று நெல்லைத் தூற்றும்பொழுது

உன் ஒற்றைக் கல் மூக்குத்தி

தொலைந்து போனதாகச் சொன்னாயே!

மேலே வானத்தில் தெரிகிறதே! அதுவா பார்!

ஏனைய்யா? கீழே தொலைத்ததை

யாரேனும் மேலே தேடுவார்களா?

என்று கேட்டாள் மனைவி.

 

நீ மேலே பார்க்கும் பொழுது

அன்னப்பறவை தன் நீண்ட கழுத்தை

நிமிர்த்தி நிலவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது!

அதனால் தான் என்றான்.

 

நாலு எழுத்துப் படிக்காமலேயே

இவ்வளவு புகழ்கிறாயே!

நீ மட்டும் படித்திருந்தால்

பெரிய கவிஞனாகியிருப்பாய் ஐயா!

 

ஏற்றப் பாட்டும் இசைப்பாட்டும்

கூத்துப் பாட்டும் கும்மிப் பாட்டும்

நம் பாட்டனும் பூட்டனும்

படிக்காமல் கட்டினதுதானே!

 

உண்மைதான்! அவர்கள்

எழுதப்படாத பாட்டுகளுக்குச்

சொந்தக்காரர்கள் .

அவர்கள்

மண்ணோடு மண்ணாகிவிட்டாலும்

அவர்கள் பாட்டுக்கள் நிலைத்துவிட்டன.

என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் போனாள்!

அவன் ஆம்! ஆம்! என்று

பின்பாட்டு பாடிக்கொண்டு பின்னால் சென்றான்.

பின்பு அவள் பட்டபாட்டை

நாம் பாடவேண்டாமே!

நிலைவைக் காணவில்லை.

மேகம் மறைத்திருந்தது.

விண்மீன்கள் கண்ணடித்தன!

 

—– அரங்க. குமார்.

       சென்னை – 600 049.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One thought on “வெண்ணிலாவும் விண்மீன்களும் ( புதுக்கவிதை )”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *