அரங்க.குமாரின் ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

 கடைசிச்சிரிப்பு

விழப்போகிறோம்

என்பது தெரிந்தும்

சிரித்துக்கொண்டிருந்தன மலர்கள். 

பனித்துளி

கருக்கலில்

புல்லின் தலையில்

 மணிமகுடம்.

 நதிகள்

 பூமியின்  

 ரேகைகள்.

 பட்டம்

 வானத்தில்

 படமெடுத்து ஆடும் நாகம்.

 அருவி

 இயற்கையன்னையின்

 சேலை முந்தானை..

 கவிஞன்

 கவிதைகளைத்

 கருத்தரிக்கும்

 தாய்.

 முத்தம்

 காதலின்

 முதல் அங்கீகாரம்.

 எந்தக் கடையிலும்

 வாங்கமுடியாத

 விலையிலாப் பரிசு.

நாணம்

ஆசைக்கு பெண்கள் இடும்

தற்காலிகத் திரை.

 மதிப்பு

அன்று

மனிதன்

 தங்கத்துக்கு மதிப்பளித்தான்.

இன்று

தங்கம் இருந்தால் தான்

மனிதனுக்கு மதிப்பு.

பெயர் சூட்டுதல்

தன் மகளுக்கு

ஒரு குன்றின் மணி

தங்கம் வாங்க முடியாதவன்

தன் மகளுக்குத்

தங்கம் என்று பெயர் வைத்தான்.

கோட்டீஸ்வரன்

தன் குலதெய்வத்தின் பெயரால்

தன் மகனுக்கு

பிச்சைய்யா  என்று பெயர் வைத்தான்.

மல்லிகை

அன்பின் தூதன்.

காதலரின்

சமாதானக் கொடி.

சிலை

சிற்பி

கல்லில் வேண்டாததை

செதுக்கித் தள்ளிய பிறகு

மீதமிருக்கும் கல்.

அது கதை சொல்லும்.

வரலாறு கூறும்.

தேன்

பூவின் எச்சிலை

வண்டு விழுங்கி

கூட்டில்

சேமிக்கும் எச்சிலின் மிச்சம்.

அலை

கடற் பெண்

நிலத்துக்கு அனுப்பும்

காதற்கடிதங்கள்.

முகவரி தெரியாததால்

திரும்பிச் செல்கின்றன.

புத்தகம்

சிலருக்குத்

தலையணை.

சிலருக்கு

ரயில் சிநேகிதம்.

சிலருக்கு

நண்பன்.

சிலருக்குக்

காதலி.

சிலருக்கு மனைவி.

சிலருக்குக்

குப்பை.

சிலருக்குப் பொக்கிஷம்.

 

——அரங்க. குமார்

                                          சென்னை – 600049.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *