அது! [புதுக்கவிதை]

அது!     [புதுக்கவிதை]
 
அது அவனுக்குக் கிடைக்கவில்லை!
அவன் அதைத் துரத்துகிறான்!
அது ஓடுகிறது!
அவனுக்குப் பழிப்புக் காட்டி ஓடுகிறது!
அவன் கால்கள் வலிக்கின்றன!
அவன் என்ன செய்தால்
அது அவன் பக்கத்தில் வரும்?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வழியைச் சொல்கிறார்கள்!
அவனும்   என்னென்னவோ செய்து பார்க்கிறான்!
அது அவன் பக்கத்தில் வரமாட்டேன் என்கிறது!
நான் நல்லவன்!
என்னிடம் வா என்கிறான்!
அது வரமாட்டேன் என்கிறது!
நான் பாவம் இல்லையா?
மிகவும் களைத்துப்போய்விட்டேன்!
வாம்மா என்கிறான்?
காரிலிருந்து ஒருவன் இறங்கி வருகிறான்!
அவன் பக்கத்தில் நின்றுகொண்டு சிரிக்கிறது!
அம்மா! அவன் மிகவும் பொல்லாதவன் அம்மா!
அவன் கொலைகள் புரிந்தவன்!
பலரை மோசம் செய்தவன்!
இரக்கம் இல்லாதவன்!
கொள்ளைக்காரன்!
நாட்டையே காட்டிக் கொடுப்பவன்!
அவன் வேண்டாம்!
என்னிடம் வா!
ம்ஹும்! வரமாட்டேன் என்றது!
நான் என்ன செய்தால் வருவாய் என்று கேட்டான்?
இவன் எனக்காக எதுவும் செய்வான்?
நீ எதுவும் செய்யமாட்டாய்!
எதற்கெடுத்தாலும்
நியாயம் தர்மம் பேசுபவனிடம்
நான் எப்படி வாழ முடியும்?
அவன் உன்னைத் தூக்கி வீசுகிறானே!
உண்மை தான்!
நீ எப்பொழுதாவது தான்
என்னை நினைக்கிறாய்!
இவன் கனவிலும் நனவிலும்
என்னையே நினைக்கிறான்!
இவன் எனக்காக உயிரையும் கொடுப்பான்?
எனக்காக உயிரையும் எடுப்பான்?
எப்பொழுதும் என்னை காதலிப்பவனிடம்தான்      
நானிருப்பேன்!
நீ நல்ல பெயர் எடுக்கப் பார்ப்பவன்?
இவன் எனக்காக எந்தப் பழியையும் ஏற்பான்!
என்று சொல்லிவிட்டு
காரில் இருந்து இறங்கிவன்
சட்டைப் பையில் ஒளிந்துகொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து சிரித்தது!
அது பேயல்ல! பணம்!
 
                                                       -அரங்க. குமார்
                           சென்னை - 600 049.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *