நெஞ்சில் பூத்த மலர் (மரபுக்கவிதை)
துள்ளிச் செல்லும் வயதில் – ஒருநாள்
துடுக்கடங்கிச் சென்றாய்;
பள்ளிச் சென்ற பொழுது – உன்னை
பார்த்தவண்ணம் நின்றேன்.
மின்னி மினுக்கும் விழிகள் – மெல்ல
விரிந்துமூடக் கண்டேன்;
கண்ணை நோக்கும் கண்கள் – அன்று
மண்ணை நோக்கக் கண்டேன்.
காலை பூத்த பூவில் – மேலும்
அழகுசேர்த்த பனிபோல்
காலைப் பார்க்கும் நாணம் – உன்றன்
கண்ணைப்பார்க்கத் தூண்டும்.
மரபில் பூத்த மலரே! – நடையில்
மாயஞ்செய்து சென்றாய்;
நினைவில்நிற்கும் வண்ணம் – என்றன்
நெஞ்சிலெழுதிச் சென்றாய்.
காலம் மாறிப் போச்சு – நம்
கனவும்மாறிப் போச்சு!
கோலம் மாறிப் போச்சு – நம்
கொள்கைமாறிப் போச்சு!
சென்று விட்ட காலம் – என்றும்
திரும்பவருவ தில்லை;
அன்று பூத்த மலரே! – இன்றும்
மனதில்வந்து செல்வாய்;
—– அரங்க குமார்
சென்னை – 600 049.