வாழ்க காதல் சாதி! (புதுக்கவிதை)

வாழ்க காதல் சாதி! (புதுக்கவிதை)

 

ஊருக்கு உண்மைகள் சொல்வேன்;

என் மனதில் பட்ட உண்மைகளைச் சொல்வேன்;

அந்த பாரதி துணையிருக்க வேண்டும்;

 

சாத்திரங்களின் பெயரைச் சொல்லி

சாதிகளைப் படைத்தாயிற்று;

அவற்றை  சட்டப்படி பதிவு  செய்தாயிற்று;

சாதிகளைக்   காக்க

சங்கங்கள் வந்தாயிற்று;

ஒட்டுகள் வாங்க சங்கங்களின்

துணை தேவையாயிற்று;

இன்று

சாதி இல்லாமல் அரசியல் இல்லை;

 

காதலிப்பவர்களுக்கு  மட்டும் தான் சாதி 

தேவையில்லை.

மற்ற எல்லாவற்றிற்கும் சாதி தேவைப்படுகிறது;

கவிஞர்களும்  தலைவர்களும்

சாதியினைப் பழித்துவைத்தால்

அவர்கள் செத்த பின்னால் அவர்களை

நம் சாதிக்காரன் என்றிடுவோம்;

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த

தமிழ் நாட்டில் இன்று

சங்கம் அமைத்து சாதிகள்  வளர்க்கின்றோம்;

சங்கம் வளர்ந்தால் ஒட்டு வங்கி வளர்கிறது;

ஒட்டுவங்கி  வளர்ந்தால்  சலுகைகள் கைகூடும்.

சாதிகள் சட்டமாக்கப்பட்டுவிட்ட திரு நாட்டில்

சாதிகள் ஒழிய  வேண்டும் என்று கூப்பாடு

போடுவானேன்;

 

காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் சாதி

தேவையில்லை;

எல்லாரும் காதலிக்க ஆரம்பித்து விட்டால்

சாதிகள் அழிந்து விடும் என்கிறீர்களா?

எல்லார்க்கும் காதல் வரும்;

ஆனால் வாயைவிட்டு வெளியில் வராது;

சிலர் தாய்தந்தை வழியில் செல்வோம் என்று

நினைப்பார்கள்;

சிலர்க்கு தைரியம் வராது;

தைரியம் வந்தாலும் வீட்டை விட்டு ஓடத்தானே

செய்கிறார்கள்;

காதலர்கள் மட்டுமே சாதி தேவை இல்லை

என்பார்கள்;

 

காதல் வாழ காதலர்கள் வெட்டுப்பட வேண்டுமா?

சம்பந்தப்பட்டவர்கள் செத்துப் போனபின்

காதல் எங்கே வாழ்கிறது?

 

காதல் ஆங்காங்கே பூக்கும்; காய்க்கும்; கனியும்;

சில பூவிலே உதிரும்;

சில காயிலே  உதிரும்;

சில கனியிலே உதிரும்;

சில மட்டுமே சந்தைக்கு வரும்;

சில சந்தைக்கு வந்தபின் அழுகிப் போகும்;

சில மட்டும் தான் வீட்டுக்குப் போகும்;

 

காதல் படங்களில் ஓடும்;

காதலர்கள் ஓடுவார்கள்;

சாதி மட்டுமே நின்ற இடத்தில் நின்று

வெற்றிக் கொடி நாட்டும்;

 

வாழ்க சாதி! வாழ்க குலம் கோத்திரங்கள்!

வாழ்க காதல்சாதி!

வாழ்க சாதிக்காதல்!

சாதிக் யாரென்று கேட்காதீர்கள்;

சாதியைக் காதலிப்பதைத் தான்

சாதிக்காதல் என்று சொன்னேன்;

வாழ்க காதல் கவிதைகள்!

காதல் படங்கள் வெற்றி பெறட்டும்!

வாழ்க எங்கோ சில உண்மையான காதலர்கள்!

                                                                                              — அரங்க குமார்

                                                                                                     சென்னை –  600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *