காதல் மொழிகள் (புதுக்கவிதை)
எக்ஸ்ரே கதிர்கள்
என்னை ஊடுருவலாம்.
என் மனதை ஊடுருவ முடியாது.
ஆனால் உன் கண்வீசும் கதிர்களோ
என் மனதைக் குத்திக் குடைகிறதே!
காந்த ஊசி
வடதிசையைத்தான் காட்டிக்கொண்டிருக்கும்.
இதுவே நானாக இருந்தால்
நீ இருக்கும் திசையையே காட்டிக்கொண்டிருப்பேன்.
எந்தக் கப்பலும் ஊர் போய்ச்சேராது.
பட்டுப்போன மரத்தை
துளிர்க்க வைக்கும் சக்தி
பரமனுக்கு உண்டு.
பட்டுப் போன என் மனதை
துளிர்க்க வைக்கும் சக்தி
உன் ஒருவளிடம் மட்டுமே உண்டு.
என் கிளைகளை
வெட்டியிருக்கலாம்.
மீண்டும் வளர்ந்துவிடும்.
நீ என் வேர்களை அல்லவா வெட்டப்பார்த்தாய்.
மலரை
வெந்நீர் ஊற்றி
கொல்ல வேண்டிய அவசியமில்லை.
தானாகவே உதிர்ந்துவிடும்.
என் மனமும் அப்படித்தான்.
மாற்றுச் சிறுநீரகம்!
மாற்று விழிகள்!
மாற்று இதயம் கிடைக்கிறது!
மாற்று மனம்!
—- அரங்க குமார்.
சென்னை – 600 049