காதல் செய்வோம்!
நான் உன்னைப் பார்க்கவில்லை;
நீ என்னைப் பார்க்கவில்லை;
ஊருக்குத் தெரியாது;
உற்றார்க்கும் தெரியாது;
நீ உன் வேலையைச் செய்வாய்;
நான் என் வேலையைச் செய்வேன்;
என் மகள் குனிந்த தலை நிமிரமாட்டாள் என்று
உன் அம்மா சொல்லுவாள்;
என் மகன் அக்கம் பக்கம் பார்க்க மாட்டான்;
என்று என் அம்மா சொல்லுவாள்;
நாம் கண்ணுக்குத் தெரியாத காதல் வலை
பின்னிக்கொண்டிருப்போம்;
காதல் வலை மெல்லிய துணியாக மாறும்;
அப்பொழுது மற்றவர் கண்களுக்குத் தெரியும்’
அப்பொழுது எல்லாரும் வேண்டாம் என்பார்கள்’
அப்படிச் சொன்னால் தான் அவர்கள் உறவுகள்;
இழை இறுகும்;
அறுக்கப் பார்ப்பார்கள்;
இழை இறுகிக் கம்பிகளாய் மாறும்;
வெட்டப் பார்ப்பார்கள்;
யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக
இரும்புத் தகடாய் மாறும்;
உடைக்கப் பார்ப்பார்கள்;
நாம் வீட்டை விட்டு ஒடும்போழுதுதான்
எல்லாரும் ஏளனமாய்ப் பார்ப்பார்கள்;
முதல் குட்டு உன் மேல் விழும்;
கல்யாணம் பண்ணிவைக்கிற வரையிலும்
உனக்குப் பொறுத்திருக்க முடியாதா
என்பார்கள்;
உலகம் அப்படித்தான் சொல்லும்;
காதல் வந்து விட்ட பிறகு
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது;
எத்தனை நாள் மனதுக்குள்
அடைகாத்துக் கொண்டிருப்பது;
ஒரு நாள் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு
வெளிவரத்தானே வேண்டும்;
பொறுத்திருக்கும் தவம் எல்லார்க்கும் வராது;
நமக்கென்று எந்த லட்சியமும் கிடையாது;
இலட்சியத்தைக் கட்டிக் கொண்டு
எத்தனை பேர்கள் அழுகிறார்கள்;
எனக்கு நீ வேண்டும்;
உனக்கு நான் வேண்டும்;
இதுதான் நம் லட்சியம்;
ஒருநாள் கரை உடைகிறது;
வெள்ளம் பாய்கிறது;
வெள்ளத்தின் வேகம் தணிய சில நாட்கள் போதும்;
காதலின் வேகம் தணிய சில மாதங்களாவது ஆகும்;
அப்புறம் நம்மை பற்றி யோசிப்போம்;
இன்னும் கொஞ்ச காலம்
கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாமோ ?
அதுவரையில் யாருக்கும் தெரியாமல்
தொட்டுக் கொண்டு தடவிக் கொண்டு
காலந் தள்ளி இருக்கலாமோ?
என்னவோ வெளியில் வந்து விட்டோம்;
வாழ்ந்து பார்க்கலாம்;
அதனால் தான்
சில புத்திசாலிகள்
வாழ்க்கைக்குத் தேவையானவைகளை
முன்னேற்பாடாக செய்து கொண்டு
காதலிக்க ஆரம்பிக்கிறார்களோ?
அதனால் தான் அவர்கள் அதுவரை
காதலைப் பற்றி நினைப்பதில்லையோ?
எது என்னவோ?
வெளியில் வந்து விட்டோம்;
நாமும் அவர்களும் ஒன்றா?
எனக்கும் பொறுமையில்லை;
உனக்கும் பொறுமையில்லை;
வந்து விட்டோம்;
வாழ்ந்து பார்க்கலாம்;
இனி நேரம் கிடக்கும்போது காதல் செய்வோம்!
—— அரங்க குமார்
சென்னை – 600 049.