காதல் வளர்கிறது!

காதல் வளர்கிறது!

சின்னஞ் சிறு சிரிப்பிற்கே

சிங்காரச் சென்னையை அவளுக்கு

எழுதி வைக்கத் தோன்றுகிறதா உனக்கு?

உன் மனதில் காதல் விதை விழுந்து விட்டது!

யார் வீட்டுச் சென்னையை

யாருக்கு எழுதி வைப்பது?

இருந்தாலும் அது காதல் தான்!

 

பெண்ணைப் பிடித்துவிட்டால்

பேயாக அலைகின்றாய்.

நாயாக அவள் வீட்டு வாசலில்

தவம் கிடக்கின்றாய்.

எப்பொழுதும் அவளின்

ஒரு பார்வைக்காக ஏங்கிக் கிடக்கின்றாய்.

 

உன் வேலைகளை கடமைக்குச் செய்து விட்டு

கற்பனையில் அவளோடு திரிகின்றாய்.

உன்னுடைய உறவுகளை

மறந்து போகின்றாய்.

அம்மா கூப்பிட்டால்

எரிந்து விழுகின்றாய்;

தங்கை பேசவந்தாள்

காதுகளில் விழுவதில்லை;

தந்தை பேசுவது உன் காதுகளுக்கு எட்டுவதே இல்லை;

 

உன் காதலிக்கு

பிரம்ம வித்தை தெரிந்திருந்தால்

இந்த ஈறைப் பேனாக்குவாள்;

பேனைப் பெருமாளாக்குவாள்;

பெருமாளை தன் நெஞ்சத்தில் இருத்திவைப்பாள்;

 

அவளின் அங்கீகாரம் கிடைக்கும்வரை

நீ போடும் கூத்திருக்கிறதே!

கூத்தரசன் கூத்தை விட மிஞ்சிவிடும் போ!

அந்த இடத்தைப் பிடிப்பதற்கு

காலைப் பிடிக்கின்றாய்.

கைகளைப் பிடிக்கின்றாய்.

காலம் முழுவதும் தவம் செய்வேன் என்கின்றாய்.

கண்ணீர் விடுகின்றாய்;

கவிதைகளைப் பொழிகின்றாய்;

காதலை மெய்யாக்க

பொய்களை விதைக்கின்றாய்;

நீ சொல்வது மெய்யா பொய்யா என்று

உனக்கே தெரியாது.

உன்மனம் அப்படி சொல்லச் சொல்லுகிறது;

 

நீ மாறிவிட்டால் அது பொய்யாகப் போய்விடுகிறது.

மாறாவிட்டால் மெய்யாகவே இருக்கிறது;

அவள் சம்மதம் சொல்லுவதற்குள்

அவள் சாமி  நீ பக்தன்;

அவள் கண்ணசைவை

அவ்வளவு சுலபமாகக் காட்டிவிடமாட்டாள்;

பிரம்ம ரிஷி பட்டம் பெற

நீ விசுவாமித்திர தவம் செய்ய வேண்டும்;

சம்மதம் தந்து விட்டால்

நீ சாமி! அவள் பக்தை!

 

அவள் அந்த வரத்தை

தவறான சமயத்தில் தந்து விட்டால்

அவளுக்குப் பிரச்சனை!

வரம் தந்தவன்

தலையில் கை வைக்க வருவதுபோல

அவள் ஓட நீ துரத்துவாய்;

 

அவள் வரத்தை காலமறிந்து தரவேண்டும்;

யாருக்குத் தரவேண்டும் என்பதை தெளிந்து

தரவேண்டும்;

அந்த ஞானம் அவளுக்கு வேண்டும்;

ஞானமுள்ளவள் உன்னை ஞானியாக மாற்றுவாள்;

போகமுள்ளவள்

உன்னைப் புழுவாக மாற்றுவாள்;

 

அவள் காதலுக்கு சக்தியுண்டு;

அது உன்னை யோசிக்கச் செய்கிறது;

அவள் ஆக்க சக்தி என்றால்

உன்னை ஆக்குவாள்;

அவள் காதல் உன்னைக் கட்டிப்போடவில்லையென்றால்

அது காதலல்ல;

நீயும் பொய்;

அவளும் பொய்;

நீ காதலால் இணையவில்லை;

கட்டாயத்தால் இணைகிறீர்கள்;

அல்லது காமத்தால் இணைகிறீர்கள்;

கடமைக்கு இணைகிறீர்கள்;

பணத்துக்காக இணைகிறீர்கள்;

 

காதலுக்கு

ஒட்டுவேலை தேவை இல்லை;

பிரிந்து போகும் உங்களை

ஒட்டிவிட நாலு பேர் தேவை இல்லை;

பிரியவே மாட்டீர்கள்;

 

காதல் வேறு; குடும்பம் வேறு;

உண்மையான காதலர்களின்

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கலாம்;

காதல் இரண்டு பேர் சம்பந்தப்பட்டது;

குடும்பம் என்பது பலபேர்கள் சம்பந்தப்பட்டது;

ஒரு காதல் வளர்கிறது! தேய்வதில்லை!

                                   ———-  அரங்க குமார் .

                                                        சென்னை – 600 049.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *