குற்றம்

குற்றம்

கோடிகோடியாய்    சம்பாதித்து

பட்டுமஞ்சத்தில் படுத்துத் தூங்கினாலும்

அவ்வப்போது தரையில் அமர்ந்து பழகவேண்டும்.

அப்பொழுது தான் தாயின் மடியில் படுத்து உறங்கிய

நினைவு வரும்.

 

பழையதை  மறப்பவனும் 

பெற்ற தாய் தந்தையை மறப்பவனும்  ஒன்றே;

இன்று  நீ சக்கரவர்த்தியாகவே இருந்தாலும்

வருங்காலம்

உன்னை பரண் மீது மூட்டை கட்டிப் போட்டுவிடும்;

 

காந்தி  தேசத்தில்

காந்திக்கே  மதிப்பில்லை;

நீ எந்த மூலை?

 

புதியதை வரவேற்பதற்காக

பழையதை விற்றுவிட 

உறவுகள் என்ன கட்டில் மெத்தை தலையணைகளா?

 

உன்னை குப்பைத்தொட்டியில் போட்ட

அம்மாவை நீ வெறுக்கலாம்.

உன் தாயுடன் படுத்துவிட்டு ஒடிப்போன

அப்பாவை வெறுக்கலாம்;

 

ஆனால்

உன்னை ஒழுங்காகப் படிக்கவைத்து ஆளாக்கிய

பெற்றோர்களை முகவரி இல்லாமல் செய்வது

என்ன தர்மம்? 

 

தாய் தந்தையின்றி

காப்பகங்களில் பிள்ளைகள் வளர்வது

பிள்ளைகள் குற்றமன்று;

 

உன்னை அனாதை ஆக்காத

பெற்றோர்களை

காப்பகங்களுக்கு அனுப்புவது

குற்றம்.

மன்னிக்கமுடியாத குற்றம்.

                                                                       —- அரங்க குமார்.

                                                                               சென்னை –  600 049.

சூதாட்டம்

அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது

என்று அறியாமல் வாழும் மானுட வாழ்க்கையே

ஒரு ஆட்டம் தான்.

இதில் சூது கிடையாது.

இதை இயற்கை என்றும் கூறலாம்.

இறைவனுடைய திருவிளையாடல் என்றும் கூறலாம்.

இன்று  மனிதன் கண்டு பிடித்த ஆட்டங்கள் பலவாயிரம்.

ஒரு சகுனியின் சூதாட்டம்

மகாபாரதத்தில் போரைத் தருவித்தது.

பலகோடி உயிர்களைப் பலிகொண்டது.

இன்று பலவாயிரம் சகுனிகள் சூதாடுகிறார்கள்.

அரசியல் சூதாட்டம்

மக்களைப் பலி வாங்குகிறது.

விளையாட்டில் சூதாட்டம்

மக்களை மடையர்கள் ஆக்குகிறது.

நேருக்கு நேராக ஆடும் சூதாட்டம்

பல குடும்பங்களை நடுத் தெருவிற்கு கொண்டுவந்தன.

இன்று மாயச் சகுனிகள் எங்கோ இருக்கிறார்கள்.

சூதாட்டம் தொலை பேசியில் வலைத்தளங்களில்

நடைபெறுகிறது.

அன்று சூதாட்டத்தின் முடிவை மாற்றி அமைக்க

கண்ணன் வந்தான்.

இன்று எந்த கண்ணன் வரப் போகிறான்.?

                                                          —– அரங்க குமார்.

                                                                   சென்னை- 600 049.      

 

தமிழ் சோறு போடுமா?

சோறு போடுமோ உங்கள் தமிழென்று

கேட்கின்றார்;

சோறு போடு என்று கேட்பதே தமிழில்  தானே;

 உங்கள் அன்னையரிடம் இந்தியில் கேளுங்களேன்.

இந்தியும் கற்றிருக்கும் தாயாக இருந்தால்

அச்சா அச்சா என்று தும்முவாள்;

மன்னிக்கவும். மெச்சிக் கொள்வாள்;

தமிழச்சி தாயாக இருந்தால்

என்னடா உளறுகிறாய்? கொழுப்பா என்று கேட்பாள்?

 

 

சோறு போடுவது தமிழின் வேலையன்று;

இந்தி படித்தவனுக்குத் தான் வேலை கிடைக்கும்;

ஆங்கிலம் படித்தவனுக்குத்தான் வேலை கிடைக்கும்

என்று எவனடா சொன்னான்;

தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவன் தானடா

வேலை செய்ய முடியும்;

தமிழ் அங்காடியில் இந்தியில்

வெங்காயம் விற்றுப் பாரேன்;

 

நீ பிறக்கும் போதே துபாயில் வேலைசெய்யப் பிறந்தவன்;

மும்பையில் வேலை செய்யப் பிறந்தவன்

என்று வரம் வாங்கிக் கொண்டா பிறந்தாய்;

அரை குறையாகப் படித்துவிட்டு

இங்கு மூட்டை தூக்க அவமானம்?

நண்பர்கள் மத்தியில்

இவையெல்லாம் இழிதொழில்கள் என்று

ஒதுக்கிவிட்டாய்;

கடல் கடந்த தேசத்தில்

கழிவறை கழுவவும் உன் மனம் துணிகிறது;

 

படிப்பு வராதது குற்றமன்று;

எதைச் செய்வது என்று உன் மனம் குழம்புகிறது;

புத்திமதி என்ற பெயரில்

பெரியவர்கள் சொல்வது உன்னைக் குழப்புகிறது;

நண்பர்கள் என்ற பெயரில்

நீயாடா இப்படி? என்ற கேள்வி

உன்னை அவமானப்பட வைக்கிறது;

உனக்கு எது பிடிக்கும் என்று யோசிக்க மறந்துவிட்டாய்;

 

 

மும்பையில் சென்று வேலை செய்வது என்று

முடிவு செய்து விட்டால்,

மும்பை மக்கள்

மூன்றே மாதத்தில்

உனக்கு கேள்விகள் கேட்டே

இந்தி கற்றுத் தந்து விடுவார்கள்;

 

 

இங்கு வந்து பணக்காரர்களாக மாறிப்போன

மார்வாரிகளும்(மார்வாடிகளும்)

பஞ்சாபிகளும் பீகாரிகளும்

பள்ளியில் தமிழ் படித்து விட்டா

இங்கு வந்து தொழில் செய்கிறார்கள்;

அவர்கள் தமிழைக்  கொல்வதை நாம் ரசிக்கவில்லையா?

நீ அங்கு சென்று முதலில் இந்தியைக் கொன்று பின்னர்

இந்தியைக் கற்றுக் கொள்ளப்போகிறாய்;

 

 

அமெரிக்காவில்தான்

திறமைக்குத் வேலை கிட்டும் என்பார்கள்;

விக்ரம் சாராபாயும்

அப்துல் கலாமும்

திறமைக்கு வேலையில்லாமலா

போய்விட்டார்கள்;

இலட்சக்கணக்கான மக்கள்

அப்துல்கலாமை

அழுது கொண்டே வழியனுப்பி

வைக்கவில்லையா?

அவர் பணத்தைத் தேடித் போகவில்லை;

புகழைத் தேடித் போகவில்லை;

இரண்டும் அவரைத் தேடி வந்தன;

அவரை மற்ற மாநிலமக்கள்

வெறுத்துவிட்டார்களா என்ன?

 

காந்தியைத் தான்

குஜராத்தியர்  என்று தமிழ் மக்கள்

வெறுத்து விட்டார்களா?

காந்தி விருப்பப்பட்டுத்தானே

தமிழில் சிலவார்த்தைகளைக் கற்றுக் கொண்டு

தமிழில் பேசினார்;

நீங்கள் தமிழில் தான் பேசவேண்டுமென்று

அவரை யார் வற்புறுத்தினார்கள்?

அவர் வேடதாரியா நாடகம் போடுவதற்கு?

அந்த கள்ளமற்ற மனிதர் தமிழில் சில வார்த்தைகளைப்

பேசிவிட்டு சிரிக்கும்போது

அங்கு தமிழன்னையும் சிரித்தாள்;

 

நீ ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்;

ஆனால் தமிழ் சோறு போடாது என்று சொல்லாதே;

ஐக்கிய நாடுகளின் சபையிலே

அப்துல்கலாம் தமிழில் பேசினார்;

தமிழ்க் கவிதை சொன்னார்;

விஞ்ஞானி தமிழை

அவமானமாகவா நினைத்தார்;

பெருமிதமாகத்தான் நினைத்தார்;

விஞ்ஞானமும் தேவை தான்;

தமிழும் தேவை தான்;

தமிழை ஒழுங்காகக் கற்றவன் தோற்கமாட்டான்;

விஞ்ஞானத்தை ஒழுங்காகக் கற்றவனும்

தோற்கமாட்டான்;

 

தமிழன்னை என்னைப் பாராட்டு!

சீராட்டு! என்று பிச்சை கேட்க மாட்டாள்;

அவளே அரசி! பேரரசி!

மொழிகளுக்கெல்லாம் பேரரசி;

அவள் பாதங்களைத்தான்

புலவர்களும் பேரரசர்களும்

பாடிப் பரவினார்கள்;

மன்னர்கள் தாம் தமிழை வேண்டினார்கள்;

தமிழன்னை மன்னர்களை வேண்டவில்லை;

என்னைப் பாடு என்று தமிழன்னை வேண்டமாட்டாள்;

உனக்குக் கொடுப்பினை இருந்தால்

அவளைப் பாடிப் பரவு;

தமிழன்னை சோறு போடமாட்டாள்;

உனக்கு நீதான் சோறு போட்டுக் கொள்ளவேண்டும்.

 

                                   —- அரங்க குமார்.

                                            சென்னை – 600 049