
செருப்பு [புதுக் கவிதை]
சித்திரை மாதம்
உச்சி வெயிலில்
ஆற்று மணலிலும்
தார்ச் சாலைகளிலும்
வெறும் காலில் நடந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்
சூட்டின் தன்மை.
பரதம் அறியாதவர்களும்
ஆடிக் காண்பிப்பார்கள்.
சிறு பிள்ளைகளாய் இருந்தால்
வீரிட்டு அழுவார்கள்.
கிராமவாசிகள்
வேலமரத்து முள்ளோ, நெருஞ்சி முள்ளோ
குத்தினால் எப்படி இருக்கும் என்பதை அறிவார்கள்.
மருத்துவ வசதி இல்லாமல்
உள்ளே சென்றுவிட்ட முள்ளை
எடுக்க முடியாமல்
குத்தின இடத்தில்
அரைத்த மஞ்சளையோ உப்பையோ
வைத்து சுடும்பொழுது
ஏற்படும் வலியை எப்படிச் சொல்வது?
சீழ்ப் பிடித்து இரணசிகிச்சை வரை செல்லும் பொழுது
உழைப்பாளிக்கு உழைப்பும், நேரமும் பொருட்செலவும்
வீண் தானே?
ஒரு சோடி செருப்பு வாங்கமுடியாமல்
எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் செருப்பை
வீட்டிற்குள்ளா கொண்டு செல்கிறோம்?
செருப்புதானே என்று இழிவாகப் பேசுகிறோம்.
செருப்பு நாடாண்டு இருக்கிறது.
செருப்பு சட்டசபையிலும்
பாராளுமன்றத்திலும்
மந்திரிகளை அவமானம் செய்கிறது.
ஆண்டவனுக்குத்
தங்கத்தில் பாதுகைகள் செய்தால்
தொட்டு வணங்குகிறோம்.
செருப்பை செய்பவன் வளர்ந்தானா?
எங்கெங்கோ வீண் செலவு செய்துவிட்டு
சக்கிலியனிடம் பேரம் பேசி சண்டைப் பிடிப்பார்கள்.
————அரங்க. குமார்