
பெண்கல்வியின் அவசியம்
கல்வி என்பது சமுதாயத்தின் முக்கிய அம்சம். நமது சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சரிசம உரிமைகளை ஒவ்வொரு துறைகளிலும் பெற்று வருகின்றனர். அதுவே சமுதாயம் வளர்வதற்கு உற்றதுணையாக இருக்கின்றது. ஆணுக்கு நிகராகப் பெண்கள் திகழ்வதற்கு அவர்கள் கற்கும் கல்வியே ஏணியாகப் பயன்படுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தைக் களையப் பெண்களுக்குக் கல்வி இன்றியமையாததாகிறது.
ஒரு நல்ல வளமான சமுதாயத்தைப் பெற்றிட மட்டுமில்லாமல், பெண்கள் தங்களது உரிமைகளை அறிந்துகொள்ளவும், தன்னம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளவும் ஒரு சிறந்த வழிகாட்டியெனக் கல்வி திகழ்கின்றது.
பெண்களின் சுயமுன்னேற்றத்திற்கு கல்வி அவசியமாகிறது. கல்வி அவர்களுக்குள் நம்பிக்கையைக் கூட்டி அவர்களது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. கல்வி கற்ற பெண்ணின் அணுகுமுறைகள் தெளிவானதாகவும், தைரியமானதாகவும் இருக்கும் என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றது. கல்வி கற்ற பெண் தனது குழந்தை ஐந்து வயதிற்கு முன்பு இறப்பதற்குண்டான வாய்ப்புகளை 70% குறைக்கிறாள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது.
ஒரு ஆண்மகன் கல்வி பெற்றால் அது அவன் வாழ்க்கையை மட்டுமே வளம்பெறச்செய்யும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அவளது மொத்த குடும்பமும், சமுதாயமும் வளம்பெறும். ஒரு பெண்கல்வி கற்பதினால் அவள் சமுதாயத்திற்கு ஏற்றவாறு சிறுவயதில் இருந்தே குழந்தைகளைப் பக்குவப்படுத்தி வளர்க்க இயலும். ஏனெனில் அவர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாகத் திகழ்பவர்கள்.
மாவீரன் நெப்போலியனும் பெண்கள் கல்வி கற்பதன்மூலமே சமுதாயம் உறுதியாக நிலைபெறும் என்றும், பெண்கல்வி இல்லையேல் நாடு வளர்ச்சி அடையாது என்னும் கருத்தை ஆதரிப்பவனாக இருந்தான்.
ஒரு பெண்ணுக்கு கல்வி என்பது மிகப்பெரிய சக்தியை அளிக்கவல்லது. பெண்கல்வி குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது.
எனவே
“பெண்கல்வியை ஊக்குவிப்போம்! வீட்டையும் நாட்டையும் சமுதாயத்தையும் மேம்படுத்துவோம்!!”
—– மு. சுகன்யா. M C A.,
சென்னை – 53.
தேதி : 4/3/2014