சீதாராமன் (புதுக்கவிதை)
- சீதாராமன்

நகரவாசி இராமனை
அயோத்தி மாநகரம்
அழுதுகொண்டே அனுப்பிவைத்தது.
வனவாசி இராமனுக்கு
வானமே கூரை ஆனதால்
எல்லைகள் அற்றுப்போனதால்
வானமும் வசப்பட்டது!
வையமும் வசப்பட்டது!
இராமன்
அயோத்தி இராமனாக மட்டுமிருந்தால்
நாட்டைப் பார்த்திருக்க வேண்டும்;
மக்களைப் பார்த்திருக்கவேண்டும்;
அயோத்திராமன்
சீதையை மட்டுமே பார்த்திருந்தான்;
அன்பு வளர்ந்தது.
சீதாராமன் ஆனான்!
வனவாசி ராமன்
சீதைக்காக வாழ்ந்திருந்தான்.
சீதையின் ஆசையை நிறைவேற்ற
மானைத் துரத்தினான்.
மானைக்கொன்றான்.
பெண்மானை இழந்தான்.
சீதைக்காக அழுதான்; புலம்பினான்;
தவித்தான்; கலங்கினான்;
தன்னைப் போலவே
நாட்டையும் மனைவியையும்
இழந்து தவித்த சுக்ரீவனிடம் நட்புகொண்டான்;
அவனுக்காக வாலியைக் கொன்றான்;
சீதைக்காக
இலங்கை மீது போர்தொடுத்தான்;
வென்றான்;
வீடு திரும்பினான்;
காட்டினில் அவன் வாழ்ந்த
பதினான்கு வருடங்களும்
சீதாராமனாகவே வாழ்ந்தான்;
இராஜாராமன் ஆனபொழுது

இராஜதர்மம் குறுக்கிட்டது;
இராஜ நியதிகள் குறுக்கிட்டன;
மக்களுக்காக வாழ்ந்தான்;
மக்களின் கோணத்தில் யோசித்தான்;
மனைவியைப் பிரிந்தான்;
மனையறம் துறந்தான்;
இல்லறம் வாழ்பவர்கள்
சீதாராமனைப் பின்பற்றவேண்டும்.
கானகம் செல்லவேண்டிய தேவையில்லை;
நல்லாட்சி செய்ய விரும்புபவர்கள்
இராஜாராமனைப் போல் வாழவேண்டும்;
மக்களுக்காக வாழவேண்டும்;
தம்
மனைவி மக்களுக்காக அன்று;
——–அரங்க. குமார்.
சென்னை – 600 049.