நிலவில்லாத வானம் (புதுக்கவிதை)

அம்மாவுக்கும் குழந்தைக்கும் நிலா தேவை! நிலவில்லாத வானம் 

நிலா ஒருநாள் காணாமல் போனால்

என்ன ஆகும்?

அமாவாசை என்பார்கள்.

பலநாள் காணமல் போனால்

அனைவரும் யோசிப்பார்கள்.

 

விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்திலிருந்து

புளுட்டோ விலகியது போல்

நிலாவும் விலகிப் போய்விட்டது

என்பார்கள்.

 

சாதரண மனிதர்களாய் யோசிப்போம்!

நிலா

காலம் காலமாய்

காதலர்களுக்குப் பிரியமானவன்!

 

கணவனுக்கு

காதல் மனைவி

கட்டிலில் நிலா!

மேகம் மூடியும் இருக்கும்!

மேகம் விலகியும் இருக்கும்!

 

கவிஞர்களுக்கு நிலா

கற்பனை தரும்

கற்பகத் தரு!

 

 

நிலைவைப் பற்றி

எழுதாத கவிஞர்கள்

அரிது!

 

உலகில் நிலா பற்றிய

கவிதைகளின் எடையும்

நிலவின் எடையும்

சமமாக இருக்கும்!

 

துன்பத்தில்

நிலா தேவை இல்லை!

இன்பத்தில்

நிலா தேவை!

 

குழந்தைக்கு

அம்மா தேவை!

அம்மாவுக்கு நிலா தேவை

குழந்தைக்குச் சோறூட்ட...

 

நிலா காணாமல் போனால்

வானம் வெறிச்சோடிப் போகும்!

இழவு விழுந்த வீட்டைப் போல

களையிழந்து காணப்படும்.

 

எப்பொழுதும்

உடனிருக்கும்

தாத்தா பாட்டிகளைப் பற்றி

நாம் யோசிப்பதில்லை!

ஒருநாள்

அவர்கள் இல்லை என்றாகும்பொழுது

அழுகிறோம்!

நிலாவும் அதுபோலத்தான்.

 

நிலா எங்கும் போகவில்லை!

அங்கேயேதான் இருக்கிறது!

ஒரு நினைவூட்டல்!

 

நிலா

அழகு குன்றாத

முதுகிழவி!

எத்தனையோ

தலைமுறைகளைப்

பார்த்துக்கொண்டு

புன்னகை மாறாமல் இருக்கிறாள்!

அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை!

 

நிலா அழகு!

கோபம் கொள்ளத்தெரியாத

பெண்ணைப் போல நிலா அழகு!

நிலவு சுடுவதில்லை!

 

—– அரங்க குமார்

       சென்னை – 600 049.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *