சட்டம் [புதுக் கவிதை]

சட்டம் [புதுக் கவிதை] 

சட்டம் ஒரு விலங்கு.                 

அது பணக்காரர்களிடம்

வாலைக் குழைக்கும்.

ஏழைகளின் மீது  விழுந்து பிடுங்கும்.

நீதி தேவதை ஒரு காந்தாரி.

குற்றவாளிகளுக்காக

கண்களைக் கட்டிக் கொண்டவள்.

குற்றவாளிகளை வளர்த்து

தருமத்தைக் காட்டுக்கனுப்புகிறாள்.

அரசியல் சகுனிகள் அவள் சகோதரர்கள்.

அவர்களின் பகடைகள் உருளும்பொழுது

அவர்கள் விரும்பும் தீர்ப்பை வழங்குகிறாள்.

 

காந்தாரி ஒரு கற்புக்கரசி.

கணவனுக்காக கண்களைக் கட்டிக் கொண்டவள்.

அவள் கண்கள் திறந்திருந்தால்

துரியோதனன் திருந்தி இருப்பான். 

 

சுயநலக்காரர்கள்

நீதி தேவதையின்  கண்களைக் கட்டிவிட்டு

தேசத்தைத் துகிலுரிகிறார்கள்.

இன்று கண்களைக் கட்டிகொண்டிருக்கும்

நீதி தேவதை கற்புக்கரசியா?

விலை போகாதவளா?

நீதி சபையில்

உட்கார்ந்திருக்கும் அனைவரும் உத்தமர்களா?

நல்லவர்கள் என்று நாடு சொல்லும்

வீட்டுமர்களாலும்

விதுரர்களாலும்

துரோணர்களாலும்

என்ன செய்ய முடிந்தது?

குற்றவாளிகளுக்கு வக்கீல்கள்

கடவுளர்களாகத் தெரிகிறார்கள்.

இத்தேசத்தின் புகழ்பெற்ற வக்கீல்கள்

பெரும்பாலோர்

ஊழல்வாதிகளுக்காகத்தானே

வாதிடுகிறார்கள்.       

சட்டத்தின் சந்துபொந்துகளை

தெரிந்து வைத்திருக்கிற 

அவர்களுடைய மேதைமை

ஊழல் பெருச்சாளிகளுக்குத்தானே

உதவுகிறது.

 

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடியும் வெல்லும்;

பாரதியின் வரிகள்  பாடாய்ப்படுவதுதான் மிச்சம்.

சிறைக்குச் செல்லும் அரசியல் குற்றவாளிகள்

அனைவரும் இதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

 

நீதி தேவதை தன்

கண்களால் பார்க்க முடியாது என்பதால்

அவள் சாலையைக் கடக்க

யாரேனும் கைப்பிடித்து அழைத்துச் செல்ல நேரிடுகிறது.

சில நல்லவர்கள் உதவுவதால்

இப்படிச் சில நன்மைகளும் நடக்கின்றன. 

 

நீதி தேவதை

தன் செவிகளை மட்டுமே நம்பிஇருக்கிறாள்.

அதனால் ஒலிப்பது

உண்மையின்  குரலா

போலியின் குரலா என்பது

அவளுக்குத் தெரியாமல் போகிறது.

அவள் கையில் தராசைக் கொடுத்துவிடுவதால்

அவளுக்கு வியாபார நோக்கம்

வந்து விடுகிறது.

 

அவள்

கண்களைக் கட்டாதீர்கள்!

அவள் கைகளில்

தராசைக் கொடுத்து விட்டு

கால்கடுக்க நிற்க வைக்காதீர்கள்.

அவள் சிம்மாசனத்தின் மீது

கம்பீரமாக வீற்றிருக்க வேண்டும்.

அவள் கண்கள் நீதி சபையை

நன்றாகக் கவனிக்கட்டும்.

அவள் இட்டபணியை

செவ்வனே செய்யும் பணியாட்களை

நியமியுங்கள்.

அவளைக் காக்க வலிமையான படை வேண்டும்.

அவளுக்கு சுதந்திரமான

ஒற்றர் படை வேண்டும்.

அந்தப் படைகள்

அரசாங்கத்தின் படைகளன்று.

அவளுக்கென்று சொந்தமான படை.

 

அவளுக்கு விஞ்ஞானத்தின்

அத்துணை வசதிகளும் வேண்டும்.

அவள் அரண்மனையில்

வைக்கப்படும் எந்த ஆவணங்களும்

களவு போகக் கூடாது.

அவள் வேலையாட்கள்

தாங்கள் அப்பழுக்கற்றவர்களா

என்பது சோதித்தறியப் படவேண்டும்.

அவளுக்குத் தெரியாமல்

ஓர் அணுவும் அசையக் கூடாது.

அவளுடைய ஆணைக்கு

ஆண்டவனே அஞ்ச வேண்டும்.

                                                

                                                    —-அரங்க குமார்

                                                           சென்னை – 600 049.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *