விவசாயி [ புதுக் கவிதை ]

விவசாயி   [ புதுக் கவிதை ] 

யாரவன் விவசாயி?

வெள்ளை வேட்டி

வெள்ளைச் சட்டை அணிந்து

நாற்காலியின் மேல்

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

வேலையாட்களை ஏவிக் கொண்டிருப்பவனா?

நூறு இருநூறு ஏக்கர்

நிலங்களுக்குச் சொந்தக்காரனா?

 

மேழி பிடிப்பவன்.

கெட்டிப்பட்ட மண்ணைக் கிளறி

பொடியாக்குபவன்.

நீரைப் பாய்ச்சி சேற்றைக் குழைப்பவன்.

விதைகளைத் தூவி நாற்று விடுபவன்.

நாற்றைப் பிடுங்கி நட்டு

களைகளைப் பறித்து  பயிர் வளர்ப்பவன்.

இதற்காக அவன் அந்த நிலத்தின்

குறுக்கும் நெடுக்கும்

ஆயிரமாயிரம் தடவைகள் நடப்பவன்.

இன்று வேலை முடிந்து விட்டதென்று

நிம்மதியாக திண்ணையில் தூங்குபவனா?

பெண்பிள்ளையை வளர்க்க

ஒரு தாய் படும் அவஸ்தையைப் போல

மனசு தவிக்க

ஞாபகமெல்லாம் நிலத்தின் மீதே இருக்க

வீட்டிலிருந்து மறுபடியும்

வயலுக்கு ஓடிப்போய்

ஆடு மாடுகள் நிலத்தில்

இறங்கிவிட்டனவா என்று பார்ப்பவன்.

நெல்முற்றி அறுவடை செய்வதற்குள்ளாக

எவனாவது இரவோடு இரவாக

நிலத்தில் இறங்கி அறுவடை செய்துவிட்டால்

என்ன செய்வது என்று

இரவு அங்கேயே காவலிருப்பவன்.

வயசுக்கு வந்த கன்னிப்பெண்ணைக்

காப்பது போலக் காத்து வீட்டிற்கு

கொண்டு சேர்ப்பதற்குள்

படாதபாடுபடுபவன்.

 

இதன் நடுவே

பூச்சிகள் பிரச்சனை

உரப்பற்றாக்குறை,

தண்ணீர்ப்பற்றாக்குறை,

பம்ப்செட் ஓட்ட மின்பற்றாக்குறை

அண்டைநிலப்ப்ரச்சனைகள்

பல பிரச்சனைகள்

போதாது என்று

புயல் மழை வெள்ளம் என்ற

இயற்கைப் பிரச்சனைகளும் 

சேர்ந்து கொள்ள 

அவன்படும்பாடு பெரும்பாடாகும்.

 

அவன் வெய்யிலில் திரிந்து

மழைக்கு ஒதுங்காமல்

கரங்கள் காய்த்துப் போவது பற்றியோ

மேனி கருத்துப் போவது பற்றியோ

தலைமுடி வறண்டு போவது பற்றியோ

யோசிப்பவன் அல்லன். 

எட்டு மணி நேர வேலை

வாரக் கடைசியில் ஓய்வு

என்று எதிர்பார்ப்பவன் அல்லன்.

 

அவனுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு.

அவர்கள் பட்டாடைகளைப் பார்த்தறியாதவர்கள்.

அவன் மனைவி

அவனின் ஒவ்வொரு வேலையிலும்

தோளோடுதோள் கொடுப்பவள்.

அவன் செய்யும் ஒவ்வொரு வேலையையும்

அவளும் அறிவாள்.

 

கருக்கலில் எழுந்து

வீட்டைப்  பெருக்கி

சாணி மெழுகி

மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்து

மாட்டுக்கு தவிடும் புண்ணாக்கும் வைத்து

தண்ணீர்  காட்டி

பாலைக் கறந்து பானையில் வைத்து

கூழைக் கரைத்துக்

கணவனுக்கும் கொடுத்து

பிள்ளைகளுக்கு கொடுத்து

தானும் குடித்து

சிறு பிள்ளைகளுக்கு

அவரவர்க்குகந்த வேலைகள் கொடுத்து

கணவன் பின்சென்று

வேலைகள் செய்து

எப்பொழுது கழனியில் இருக்கிறாள்

எப்பொழுது வீட்டில் இருக்கிறாள்

என்பதை அறிய முடியாத அளவிற்கு

அங்குமிங்கும் அல்லல்பட்டு

அவள்படும் பாடும் பெரும்பாடே.

 

அவள்

எண்ணெய் வைத்து

கூந்தலைச் சீவி

பவுடர் பூசி

மை தடவி பொட்டிட்டு

பூச்சூடுவதேல்லாம்

அன்றாட வேலைகளல்ல.

அவள் பிள்ளைகளும்

அதை அறியார்கள். 

என்றோ ஒரு நல்ல நாள்

பண்டிகை என்று வந்தால்

உண்டு.

கோவில் திருவிழா என்று வந்தால்

மகிழ்வார்கள்.

 

ஷாப்பிங் அவர்களுக்குத் தெரியாது.

வருஷத்தில் எப்போதோ ஒருமுறை

சந்தைக்குப் போனால் உண்டு.

அதில் அவன் மகள்

கண்களை அகல விரித்து

அங்கு விற்பதை எல்லாம் பார்த்து

ஆச்சரியப் படுவதைப் பார்க்கவேண்டுமே.

அவளால் பார்க்கத்தான் முடியும்.

 

அவளுக்குப் பல வருடங்களாக

ஒரு மணிமாலை போட்டுக்கொள்ளவேண்டும்

என்ற ஆசை.

சிவப்புக் கலர் ரிப்பன்.

ரோஸ் கலர் தாவணி.

ஆரஞ்சு கலர் ரவிக்கை

அணிந்து கொள்ள வேண்டும் என்ற

ஆசையும் உண்டு.

 

பக்கத்துக்கு டவுனுக்கு

வாழ்க்கைப் பட்டுப் போன

அத்தை சென்ற வருடம் வரும் பொழுது,

முக்கால்வாசி தீர்ந்து போன

ஒரு பவுடர் டப்பாவைக் 

கொடுத்து விட்டுப் போனாள்.

அது சென்ற பொங்கல் வரை வந்தது.

 

அவள் அம்மாவின்

கைகளைச் சுரண்டி

பச்சை கலர் ரிப்பன்

வாங்கித் தரும்படி கெஞ்சினாள்.

கணவனின் முகக் குறிப்பறிந்து

நடப்பவளான அவள் அம்மா

எப்படியோ போராடி வியாபாரம் பேசி

இரண்டு பச்சைக் கலர் ரிப்பன்களும்

சிவப்பு வளையல்களும்

வாங்கிக் கொடுத்தாள்.

அவள் முகம்

சந்தோஷத்தில் பளிச்சென்று ஆனது.

 

அவன் ஒவ்வொன்றும்

ஆனை விலை குதிரை விலை விற்கிறது

என்று பொருமினான்.

 

அவன் விளைவிக்கும் பொருட்கள் அனைத்தும்

திடீர் திடீர் என்று விலை உயர்வது இல்லை.

அத்தியாவசப் பொருட்கள் என்பதால்

உணவுப் பொருட்கள்

விலையேற்றம் எல்லாருடைய  கவனத்திற்கும்

உடனே வந்து விடுகிறது. 

காய்கறிகள் விலை ஏறும்.

ஆனால் அதற்கும் அவனுக்கும் எந்த

சம்பந்தமும் இருக்காது. 

மழை இல்லை.

விளையவில்லை என்று

நடுவில் உள்ள வியாபாரி சொல்லுவான்.

விலை ஏற்றத்திற்கான

எல்லாக்  காரணங்களையும்

வியாபாரிகள்தாம் சொல்லுவார்கள்.

விளைவிப்பவன்

சென்ற வருடம் கொடுத்ததைவிட

ஒரு பத்து ரூபாய் கூட கொடுத்தால்

சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போய்விடுவான்.

 

இந்தியாவில்

மோட்டார்  கம்பெனிகளும்

கார் கம்பெனிகளும்

சாப்ட்வேர் கம்பெனிகளும்

தோல் கம்பெனிகளும்

பல்கிப் பெருகிவிட்டன.

பல வெளிநாட்டுக் கம்பெனிகளும்

வர ஆரம்பித்துவிட்டன. 

வளர்ச்சி! வளர்ச்சி!

எங்கு பார்த்தாலும் வளர்ச்சி தான்.

 

ஊருக்கொரு  போன்பூத்தென்ற

நிலை மாறி தெருவுக்கொன்று என்று வந்து 

வீட்டிருகொரு மொபைல்

என்று வந்து விட்டது.

நகரில்தான் அத்துணை வளர்ச்சி.

கம்ப்யூட்டர் இன்டர்நெட் என்று

தொலைதொடர்புத் துறையில்

அசுர வளர்ச்சி.

 

தன் வீட்டில் எலுமிச்சை அளவு

தங்கம் வைத்திருந்த ஒருவனிடம்

நாடு எப்படி என்று கேட்டதற்கு

எல்லோரும் எலுமிச்சை அளவு

தங்கமேனும் வைத்திருக்கிறார்கள்

என்றானாம்.

 

நகரங்களின் வளர்ச்சியைப்

பார்த்துவிட்டு  நாடு வளர்ந்துவிட்டது

என்று நினைக்கிறார்கள்.

இவர்கள் இந்தியாவின்

அத்தனை கிராமங்களையும்

பார்த்தறியமாட்டார்கள்.

 

தெரிந்தோ தெரியாமலோ

தமிழகத்தில் பெரும்பாலான

வீடுகளுக்கு கலர் டிவிக்கள் கொடுத்து விட்டார்கள்.

அதில் வரும் விளம்பரங்களைப்

பார்த்தால் நகரத்தார்க்கே

மூச்சு முட்டுகிறது.

கிராமத்தவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

 

உடம்பு முழுவதும் தங்கத்தால்

இழைத்தது போன்று

எல்லாவகையான  நகைகளையும் போட்டுக்கொண்டு

ஒரு அழகான தங்கமங்கை தோன்றி

நீங்கள் வாங்கவில்லையா

என்று கேட்கிறாள்.

பட்டாடைகளைப் போட்டுக்கொண்டு

பதுமைபோல் பெண்ணொருத்தி

வாருங்கள் அள்ளிச்செல்லுங்கள்

என்கிறாள்.

அழகான நடிகைகள்

தங்களின் அழகின் ரகசியம்

இந்த சோப்பு  ஷாம்பூ கண்ணாடியில் தாம்

இருக்கிறது என்கிறார்கள்.

 

மொபைலில்

இந்த ஆப்பை டௌன்லோடு செய்து

இருக்கும் இடத்திலிருந்தே

எல்லாவற்றையும் வாங்குங்கள்

என்கிறார்கள் அல்லது

இருக்கும் இடத்திலிருந்தே

எல்லாவற்றையும் விற்றுவிடுங்கள்

என்கிறார்கள்

 

இதுவெல்லாம்

ஏழைகளுக்கு அன்று

செல்வந்தர்களுக்கென்று

யதார்த்தவாத புரியலாம்.

 

டிவி வாங்கும்போது

விலையைப் பற்றி யோசிப்பதில்லை.

மொபைல் வாங்கும்போது

விலையைப் பற்றி யோசிப்பதில்லை.

பழைய மாடல் என்று சொல்லி

பழசைத் தள்ளி புதிது வாங்க தோன்றுகிறது.

எந்த நாகரீகப் பொருட்களின் விலையேற்றமும்

பெரிதாய்த் தோன்றுவதில்லை.

 

வெங்காயம் விலையேறிவிட்டது

என்ற குரல் டெல்லி வரை கேட்கிறது.

அரசாங்கமே கவிழ்கிறது.

 

காய்கறிகளின் விலையேற்றம்

அரிசி கோதுமைகளின்   விலையேற்றம்

விவசாயியின் வாழ்வில்

எந்த ஏற்றத்தையும்

ஏற்படுத்தவில்லையே. 

தக்காளி கிலோவிற்கு

பத்துருபாய் விலை கூடினால்

அந்த பத்து ருபாய்

 நம் விவசாயியின்

உண்டியலுக்கா போகிறது.

 

உழைத்துத்  தின்பவன்

நடந்து போகிறான்.

அவனிடம் வாங்கி விற்பவன்

காரில் போகிறான்.

உழத்திக்கு( உழவனின் மனைவி )

உடம்பு வீங்கவில்லை.

வியாபாரியின் மனைவி

தன் உடம்பை தானே சுமையாய்

நினைக்கும் அளவிற்கு

உடம்பு வீங்கி அதன் மீது

பட்டையும் தங்கத்தையும்

பகட்டாய் சுற்றிக்கொண்டு

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க

உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை.

எழுந்தால் உட்கார முடிவதில்லை.

 

குரல் கொடுப்பவர்கள் எல்லாம்

நகரங்களில் இருக்கிறார்கள்.

மாட மாளிகைகளில் வாழ்கிறார்கள்.

காரில் போகிறார்கள்.

காரில் வருகிறார்கள். 

விவசாயிகள் குரல் கொடுப்பதைப்

பார்த்திருக்கிறீர்களா?

மிஞ்சி மிஞ்சிப் போனால்

தண்ணீருக்கு குரல் கொடுப்பான்.

அவனுக்கு குரல் கொடுக்க நேரமேது?

 

மழைக் காலங்களில்

வாழைத்தோப்பு அழிந்துவிட்டதைக்

காண்பிப்பார்கள்.

விளைநிலங்கள் தண்ணீரில்

மூழ்கிவிட்டதைக் காண்பிப்பார்கள்.

இவர்கள் எல்லாம் நிலச்சுவாந்தாரர்கள் .

 

கால் காணிக்குச் சொந்தக்காரர்களைப்

பேட்டி எடுப்பார்கள்.

அதனால் அவர்களுக்கு

எந்தப் பலனும் கிடையாது.

 

எலிக்கறி தின்பதனை அரசியலாக்கலாம்.

வருத்தப்படுவது எலியும் விவசாயியும் தான்.

விவசாயிக்கு பயிர் போயிற்று.

எலிக்கு உயிர் போயிற்று.

இவர்களுக்கு என்ன போயிற்று?

 

இதில் ரியல் எஸ்டேட்டுக்காரர்கள் வேறு

நிலங்களைப் பட்டாபோட்டு விற்கிறார்கள். 

ஒருநாள்

விவசாய வர்க்கமே

காணாமல் போகப் போகிறது.

அதற்குப் பிறகாவது

விவசாயம் வேண்டுமா வேண்டாமா

என்று பட்டிமன்றம் வைத்து

முடிவு காண்பார்களாக.

                                                          

                                                                          ——-அரங்க குமார்     

                                                                         சென்னை – 600 049.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *