தேர்தல் [ சிந்துக் கவிதைகள்]

தேர்தல் [ சிந்துக் கவிதைகள்]

தேறுதல் சொல்லவே வந்துவிட்டார் – நாட்டின்
தேர்தல் என்றொரு சொல்லினிலே
ஆறுதல் கொள்ளுங்கள் மக்களெல்லாம் – அவர்கள்
அண்டி வருவது இப்பொழுதே………………………………1

மாறுதல் வந்திடும் என்றிடுவார் – அவர்கள்
வாழ்வில் என்றதன் பொருளாகும்.
மீறுதல் என்பதே இலட்சியமாம் – வாக்கை
மீறுதல் இரத்தத்தில் ஊறினதே…………………………….2

வெள்ளை மயமென வந்திடுவான் – அது
வெள்ளைக் கொடியென உணர்ந்திடுக
கொள்ளை யடிப்பவன் வந்திடுவான் – பாலின்
வெண்மைச் சிரிப்புடன் வந்திடுவான்…………………3

மெட்டு வேறு:
குடிசைகளில் அடுப்பெரியும் – வாக்கைக்
கொடுக்கும் வரையில்;
குடிசைகளே தாமெரியும் – வாக்கைக்
கொடுத்த பின்னால்;…………………………………………….4

தெருக்களிலே கொடிபறக்கும் – தலைவர்
சித்திரங்கள் சுவர்களிலே;
கருக்கலிலே ஒலிமுழக்கம் – கேட்டுக்
காக்கைகளும் சிடுசிடுக்கும்;…………………………………5

மூப்படைந்த தெருக்களிலே – தலைவர்கள்
முகமலர வருவதற்கு;
வைத்தியங்கள் நடக்குமாடா – தலைவர்கள்
வருவதிலும் இலாபமுண்டு;………………………………..6

கட்சிப் புடவைகளோ – நம்
கண்ணைப் பறிக்குதிங்கே;
கட்டிப் பார்ப்பதற்கு – நாட்டில்
கன்னியரா பஞ்சம்? ………………………………….7

வெள்ளைக் கொடியில்லை – இருப்பின்
வேட்டிகள் கிடைத்திருக்கும்;
அள்ளிக் கொடுப்பதற்கு – தேர்தல்
வள்ளல்கள் கிடைத்தார்கள்;…………………………………..8

வாகனங்கள் வீட்டருகே – உங்களை
வரிந்து செல்ல
மோகனங்கள் பாடிடுவார் – உண்மை
புரிந்து கொள்க;………………………………………………………………..9

வீதிகளில் தமிழ் முழக்கம் – தமிழ்
வேட்கையிலே மறந்திடாதே
பாதியிலே போகுமடா – எல்லாம்
பதவிக்கு வந்த பின்னால்;……………………………………..10

என்சாதி என்றிடுவான் – எளிதில்
எளிதில் மயங்கிடாதே;
எஞ்சாது ஏதொன்றும் – நாட்டை
எலியாய்ச் சுரண்டிடுவான்;………………………………….11

பத்திரிக்கைச் செய்தி வரும் – அவரைப்
பாரியென பேகனென;
அத்திரைக்குப் பின்னாலே – அங்கு
நடப்பதனை யாரறிவார்;………………………………………………12

எப்பொருளைக் கேட்டாலும் – அதன்
மெய்ப்பொருளைக் கண்டிடுக;
இப்பொருளோ அதிகாரம் – நீ
எண்ணிடுக பலமுறைகள்;………………………………………….13

கொள்கைகளைக் கூறிடுவார் – உணர்ந்து
கொள்ளும் வேளையிலே
கொள்கையெல்லாம் மாறிவிடும் – பித்தம்
பிடித்துவிடும் உன்றனுக்கு………………………….14

மெட்டு வேறு:

தான்பெற்ற பிள்ளைக்கொரு பெயரை வைக்க – தங்கள்
தலைவனைத் தான்நாடுகிற கூட்டமிங்கே
யான்பெற்ற செல்வங்கள் பெறுகவென்று – மக்கட்கு
இசைவுற்று தருகின்ற தலைவருண்டோ?…………………..15

கணக்கொன்று இல்லாத இடமேயில்லை – அரசியற்
கணக்கென்று ஒன்றுஉண்டு; தாம்போடும்
கணக்கிங்கு தப்பிடுமென்று ஐயம்வந்தால் – சாதிக்
கணக்கொன்று போட்டிடுவார்;………………………………………16

மெட்டு வேறு:
நல்லதொரு காலம்வரும் – அன்று
நல்லவர்கள் விழித்திடுவார்;
சொல்லவொரு குறையுமின்றி – மக்கள்
சுகித்திருக்கும் காலம்வரும்;…………………………………………17

இளைஞர்களின் கூட்டமெழும் – கொள்கைப்
பிடிப்போடு வளர்ந்திருப்பார்;
களைகளைப் பிடுங்கிடவே – நல்லவொரு
கட்சியினைத் தோற்றுவிப்பார்;……………………………………18

சாதிகளைப் பணயம் வையார் – உயர்
சத்தியத்தை நம்பிடுவார்;
நாதியற்ற மக்களைத்தம் – தம்
நாடகத்தில் ஆட்டுவியார்;………………………………………………19

மேடைகளில் முழங்கிடுவார் – தம்
எதிரிகளைப் பழித்தன்று;
ஏழைகளும் ஏற்றம்பெற – தமிழ்
இசைஎங்கும் முழங்கிடவே;………………………………..20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *