
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
தமிழகத்தின் உயர்ந்த நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் ,வீரம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் சோழப் பேரரசர்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததை நம் வரலாற்று ஆசிரியர்கள் சிறப்பாக நிறுவி உள்ளனர். இதற்கு தமிழ் இலக்கியங்கள், கோவில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை பெரிதும் துணை புரிகின்றன.
இடைக்கால சோழர் வரலாறு 9-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. விஜயலாய சோழன் தன் வீரத்தினாலும், ராஜ தந்திரத்தாலும் பல்லவப் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்து சோழப் பேரரசைத் தொடங்கி வைக்கிறான். அவனுக்குப் பிறகு பல சிறந்த அரசர்கள் தோன்றினாலும் அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயருடைய இராஜராஜசோழன் காலத்தில் சோழப் பேரரசு பரந்து விரிந்தது. இவன் ஆட்சிக்காலம் கி.பி 985-லிருந்து கி.பி 1014 வரை நீடித்தது எனலாம். இவன் சுந்தரச் சோழன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகன் ஆவான்.இலங்கையில் தொடங்கி தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வந்தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லாம் அவன் புகழ் பரவியது. அவனுக்கு மும்முடிச் சோழன், சிவபாத சேகரன்,திருமறை கண்ட சோழன் என்று பல பட்டப் பெயர்கள் உண்டு. அவன் தன் காலத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்றதோடு நின்று விடாமல் பல கோவில்களை இலங்கையிலும், தமிழகத்திலும் கட்டினான். அந்த கோவில்களைப் பராமரிப்பதற்காக ஏராளமான செல்வங்களைத் தானமாக வழங்கினான். இவன் காலத்தில் சைவ சமயம் செழித்தோங்கியது. இவன் கலை, மதம், மொழி, இனம், நாடு ஆகிவற்றிற்காக செய்துள்ள பணிகள் எண்ணிலடங்காது. இவன் வரலாற்றை விவரித்துப் பலப்பல புத்தகங்கள் எழுதலாம்; எழுதி இருக்கிறார்கள்; இனியும் எழுதுவார்கள்.
பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் இராஜ ராஜா சோழனால் கி.பி 1004-ம் ஆண்டு முதல் 1009 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இக்கோவில் முழுக்க முழுக்க கருங்கற்களினால் திராவிடக் கட்டடக் கலைப் பாணியில் கட்டப்பட்டு இருக்கிறது. இது சோழர்களின் உளப்பாங்கு, தமிழரின் நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை மற்றும் உலோக வார்ப்புருக் கலை [bronze casting ] முதலியவற்றில் சோழர்கள் பெற்றிருந்த மேம்பட்டத் திறத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
இக்கோவிலைக் கட்டும்பொழுது அச்சு [ axial ] மற்றும் சமச்சீர் வடிவியல் [ symmetric geometry ] போன்ற கணித விதிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கோவில் வாஸ்து சாஸ்திரப்படியும், ஆகம விதிகளின்படியும் குஞ்சர மல்லன் இராஜ ராஜா பெருந்தச்சன் என்ற புகழ்பெற்ற சிற்பியின் தலைமையில் கட்டப்பட்டதாகும். இவருடையப பரம்பரையில் வந்தவர்கள் இன்றளவும் அச்சிற்பப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டும்காலத்தில் 1 3/8 இன்ச் அல்லது அங்குலம் என்ற கணித அலகு பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது. [ 33 அங்குலம் = ஒரு முழம் அல்லது ஒரு ஹஸ்த அல்லது கிஷ்கு ஆகும்] .
இக் கோபுர கலசம் அல்லது விமானம் சுமார் 81.28 டன் எடையுள்ள ஒரே கல்லினால் ஆனது என்று நம்பப்படுகிறது. இந்தக் கல்லை தற்பொழுதுள்ள உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு 6.44 கி.மீ தொலைவிற்கு சாரம் [ ramp ] கட்டப்பட்டு யானைகள் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறார்கள். கோவிலுக்கு எதிரில் இருக்கும் பெரிய நந்தி 6மீட்டர் நீளமும் 2.5மீட்டர் அகலமும் 2மீட்டர் உயரமும் கொண்ட 20டன் எடையுள்ள ஒரே கல்லினால் ஆனதாகும். இதன் பிரகாரம் 240 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உடையதாகும். பொதுவாக பரதநாட்டியத்தில் 108 கரணங்கள் [ postures ] இருப்பதாகக் கூறுகிறார்கள். இங்கு மேலடுக்கின் சுற்றுப்புற சுவர்களில் பரதநாட்டியக் கலையின் 81 கரணங்கள் [ postures ] சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.
அம்பாளுக்கான கோவில் 13 ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது. சுப்பிரமணியர் கோவில் விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் விநாயகருக்கான கோவில் மராத்திய மன்னர்கள் காலத்திலும் கட்டப்பட்டது.
பெரிய கோவில் நதிக்கரையில் அமைந்துள்ளதால் நதி நீர் திருப்பி விடப்பட்டு கோவிலின் மதிலைச் சுற்றிலும் அகழி உருவாக்கப்பட்டு உள்ளது. கோவிலின் பெரிய மதில் சுவர்கள் ஒரு பெரிய கோட்டை மதில் போல் உள்ளது. கோவிலுக்குள் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஐந்து நிலைகள் கொண்ட பெரிய கோபுரத்தின் வழியாகவும் மற்றொன்று சிறிய கோபுரத்தின் வழியாகவும் செல்வதாகும். பிரும்மாண்டமான பெரிய விமானம் 60 மீட்டர் உயரம் உடையதாகும். முக்கிய வாயிலில் உள்ள கோபுரம் 30 மீட்டர் உயரம் உடையதாகும்.பொதுவாக திராவிடக் கட்டடக்கலையில் முக்கிய கோபுரம் கோவிலின் விமானத்தை விடப் பெரியதாக இருக்கும். இங்கு அது மாறுபட்டு உள்ளது.
கோவிலின் முக்கியப் பகுதி மிகப் பெரிய செவ்வகவடிவின் நடுவில் அமைந்துள்ளது. இது ஒரு நந்தி, ஒரு ஆயிரங்கால் மண்டபம், அனைவரும் கூடி நின்று தொழும் இடம், பல சின்னஞ்சிறு கோவில்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோவிலின் மிக முக்கியப் பகுதி உள்மண்டபம். இது மிகப் பெரிய கற்சுவர்களால் சூழ்ந்துள்ளது. கோவிலின் மூலவராகிய சிவபெருமான் இங்கு கருவறையில் வீற்றிருக்கிறார். கருவறை மிகப் பிரும்மாண்டமான விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. கருவறைக்குள் வைதீகப் பெருமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.கோவிலின் உட்புறச் சுவருக்கும் வெளிப்புறச் சுவருக்கும் நடுவில் இறைவனைச் சுற்றி வருவதற்கு சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது. சுற்றுப்புற சுவர்களில் தக்ஷிணா மூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களின் பெரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அஷ்ட திக்கு பாலகர்களான இந்திரன், அக்கினி, சந்திரன் , வருணன், குபேரன், ஈசானன், எமன், வாயு ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அரிய கோவில்களில் இதுவும் ஒன்று.
நம்பிக்கைகளும் சிறப்பம்சங்களும்
இக்கோவிலின் விமானம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய விமானம் [ 60 மீட்டர் ] என்று கூறலாம். கோபுரம், விமானம் என்ற சொற்கள் பொதுவாகக் கோபுரத்தைக் குறிப்பதாக இருந்தாலும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. நுழைவாயில்களில் உள்ளதை கோபுரம் என்றும் கருவறைக்கு மேல் உள்ளதை விமானம் என்றும் கூறுவார்கள். திராவிடக் கட்டடக் கலை பாணியில் கோபுரம் என்பது விமானத்தை விடப்பெரியதாகும்.ஆனால் இக்கோவிலில் மாறுபட்டு உள்ளதென்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இக்கோவில் விமானத்தின் மேலுள்ள ஐரோப்பியன் போலுள்ள சிற்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஐரோப்பியர்களின் படையெடுப்பு நிகழும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார்கள் என்று கூறுவோர்கள் உள்ளனர். பின்னர் ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இது வெறும் ஏமாற்று வேலை என்று கூறுகின்றனர்.
அதேபோன்று நிழல் சாயா கோபுரம் என்பது முற்றிலும் உண்மையன்று. இந்தக் கோவிலைக் கட்டி முடிக்க சுமார் 130,000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கருதுகிறார்கள். கோவிலின் மேலுள்ள கும்பம் 60 டன் எடையுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்டதாகக் கருதுகிறார்கள். இந்தக் கல்லினை ஒரு சாரம் அமைத்து மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள். இக்கோவிலில் இருந்து ஏறக்குறைய 3 மைல்கள் தொலைவில் இராஜராஜ சோழனுடைய தாயார் வானவன் மகாதேவி பிறந்த ஊரான திருக்கோவிலூரில் இருந்து இம்மண் சரிவு தொடங்குகிறது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது
சுவர்ச்சித்திரங்கள்

சுண்ணாம்புக் கற்கள் சன்னமாகப் பொடிசெய்யப்பட்டு பாகு போன்று குழைத்துக் கொள்ளப்பட்டு வரையப் போகிற கற்சுவர் அல்லது குகைச் சுவர்கள் மீது பூசப்படும். பின்னர் கூழாங்கற்களைப் போன்ற வழுவழுப்பான கற்களைக் கொண்டு தேய்ப்பார்கள். இது உலர்ந்து காய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். அதற்குள் வரைய வேண்டிய ஓவியங்களை வரைவார்கள். பிறகு இயற்கையில் கிடைக்கும் வண்ணப் பாறைகள் அல்லது கற்களைக் கொண்டு வண்ணப்பொடிகள் தயாரிப்பார்கள். அதை வண்ணங்களாக உபயோகித்து ஓவியங்களுக்கு வண்ணங்கள் கொடுப்பார்கள். இத்தகைய ஓவியங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும். இத்தகைய ஓவியங்கள் தாம் அஜந்தா எல்லோர குகை ஓவியங்கள், சிற்றண்ணல் வாயில் ஓவியங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே போன்று தான் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் ஓவியங்களும் வரையப்பட்டு இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளாக தீபத்தில் இருந்து வரும் புகை மற்றும் கற்பூரத்தில் இருந்து வரும் புகை மற்றும் பல காரணிகளால் சோழர் கால ஓவியங்கள் பாதிப்படைந்து விட்டன. மங்கிப் போன சோழர் கால ஓவியங்கள் சிலவற்றின் மீது 400 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த நாயக்கர்கள் ஓவியம் தீட்டி இருக்கிறார்கள்.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை உலகிலேயே முதல் முறையாக 1980-ம் ஆண்டு டி-ஸ்டக்கோ முறையின் மூலம் [ De – stucco process ] சோழர்கால ஓவியங்கள் மீதிருக்கும் நாயக்கர் ஓவியங்களைப் பிரித்தெடுத்து fibre glass board – களில் பதித்து இருக்கிறார்கள். இதனால் சோழர் கால ஓவியங்களையும் பார்க்க முடியும். நாயக்கர் கால ஓவியங்களையும் பார்க்க முடியும்.
தொடரும்…
—– அரங்க.குமார்
சென்னை – 600049
Reference sites: [ I have collected the informations from the following sites and translated in Tamil]
http://indiahindutemples.blogspot.in/2008/07/tanjore-bragatheeswarar-temple.html
http://tamilvaralaru.wordpress.com/
http://en.wikipedia.org/wiki/Later_Cholas
http://www.brihadeeswarartemple.com/temple-complex.
http://en.wikipedia.org/wiki/List_of_mudras_(Dance)
http://en.wikipedia.org/wiki/Brihadeeswarar_Temple
http://aivirt.blogspot.in/2010_06_01_archive.html
http://en.wikipedia.org/wiki/Chola_art