தற்கொலை [ புதுக்கவிதை ]
சாகும்படி
எந்த சாத்திரமும் சொல்லவில்லை.
கல்லடிபட்டும்
நாய் தற்கொலைக்குத் துணிவதில்லை.
வயதாகி
பாரம் இழுக்க முடியாமல் நின்றுவிடும்
மாடுகளின் ஆசனவாயில்
குச்சியால் குத்துகிறான் வண்டிக்காரன்.
மாடுகளும் தற்கொலைக்குத் துணிவதில்லை.
ஆண்டவனும் எல்லோராலும் நேசிக்கப்படவில்லை.
அறிவாளி என்பவன் ஒருவனில்லை.
நான்கு பேர்கள் சொல்வதினால்
ஒருவன் அறிவாளியாவதில்லை.
நான்குபேர்கள் சொன்னதினால்
ஒருவன் முட்டாளாய் ஆவதில்லை.
பொய் என்றும் நிரந்தரமானதில்லை !
உலகில் நீ தனியானவன் இல்லை.
யோசிக்கத் தெரிந்த மனிதனே
தற்கொலை தேவையில்லை.
—————அரங்க. குமார்
சென்னை – 600049