எதிர்பார்ப்புகள் [ புதுக்கவிதை ]
ஒவ்வொரு செயலுக்கும்
அங்கீகாரத்தை
எதிர்பார்த்ததில்
துன்பமே மிஞ்சியது.
சிலர் இனிக்கிறதென்றார்கள்.
துள்ளிக் குதித்தேன்.
சிலர் புளிக்கிறதென்றார்கள்.
முகம் சுளித்தேன்.
ஆனால்
காய்த்துப் புளித்து
பிறகு இனிக்கும்
என் வீட்டு
மாமரமோ
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
ஓங்கி வளர்ந்து நின்றது.
கல்லால் அடிபடுவது
அம்மாமரத்துக்குப் புதிதல்ல;
கல்லால் அடிபட்ட மாமரத்தின்
மாவிலைகள் தோரணமாயின.
எனக்குப் பாடமாயின.
————- அரங்க. குமார்.
சென்னை – 600049