பாதி மனிதன் [ புதுக்கவிதை ]
காலைச் சுற்றி சுற்றி வருமே
என்பதற்காக
பூனைக்குப் பால்வார்க்காத மனம்.
ஊருக்குப் போய்விட்டால்
பார்த்துக்கொள்ள முடியாது
என்பதற்காகவே
அனாதையாக்கப்பட்டுவிட்ட
வீட்டு நாய்.
பணியில் இருக்கும்போது
இன்றைக்கு
சிரித்து வைத்தால்
நாளைக்கு முறையில்லாத வழியில்
உதவி கேட்டு வந்துவிடுவானோ
என்று விறைப்பாக வைத்துக்கொள்ளும்
முகம்.
தியாகிகளுக்கு
தீபமேற்றினாலும்
எதையும் தியாகம் செய்ய விரும்பாத
மனம்.
வழியில்
தடைக்கல் இருந்தால்
அதை யாரேனும்
அகற்றிப் போடுவார்களா நாம்
பாராட்டலாம் என்னும் மனம்.
இவைதாம்
ஒருமனிதன்
முழு மனிதனாகத்
தடைக்கல்லாயிருப்பவை!
————- அரங்க. குமார்
சென்னை – 600 049