பார்வை [ புதுக்கவிதை ]
வண்டிக்காரா!
உன் மாட்டு வண்டியின்
க்ரீச் க்ரீச் என்ற சத்தமும்
சக்கரங்களின் கடகட சத்தமும்
காளைகளின்
கழுத்து மணிச்சத்தமும்
எனக்கு ஆனந்தமாயிருக்கிறது
உனக்கு என்று கேட்டேன்.
அட! மாட்டு வண்டியென்றால்
நாலு சத்தம் கேட்கத்தான் செய்யும்.
நான் இதையெல்லாம் யோசிப்பதில்லை.
அச்சாணிக்கு வண்டிமை போடவில்லை.
சத்தம் போடுகிறது.
மாட்டுப் பொங்கலுக்கு
மாடுகளுக்கு மணி கட்டினோம்.
இன்னும் கழற்றவில்லை.
எங்களுக்கு
இதையெல்லாம் யோசிக்க நேரமேது தம்பி
என்றான்.
உண்மை தானே!
இது இவன் பார்வை.
குயில் கூவுவதையும்
மயில் ஆடுவதையும்
கவிஞர்கள் பாட்டில் வைப்பார்கள்.
இது அவர்கள் பார்வை.
உழவனுக்கும்
உழைப்பாளிக்கும் ஏது நேரம்?
கவிஞர்கள்
ஓவியர்கள்
இசைவாணர்களின் உலகம் தனி.
அவர்களை மதிக்க வேண்டும்.
ஆனால்
உழைப்பாளிகளைக் கும்பிடவேண்டும்.
———— அரங்க. குமார்
சென்னை – 600 049.