மிதிவண்டி
மிதிவண்டி
சிவனுக்கு வாகனம் எருது.
திருமாலுக்கு வாகனம் கருடன் .
முருகனுக்கு வாகனம் மயில்.
இப்படியாக எனக்கு வாகனம் மிதிவண்டியாயிற்று.
அதனால்
நான் கடவுளல்ல.
என் பொருளாதாரம்
எனக்கு மிதிவண்டியை மட்டுமே சொந்தமாக்கியது.
மிதிவண்டி எனக்கு ஓர் அற்புதமான தத்துவத்தை விளக்கியது.
ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும்
பல தொழிலாளிகளின் உழைப்பு இருக்கும்.
மிதிபடுவதும் உழைப்பதும் பின்சக்கரம்.
இலகுவாகச் செல்வது முன்சக்கரம்.
முன்சக்கரமும் , பின்சக்கரமும்
உழைப்பு என்ற சங்கிலியால் பிணைக்கப்படவில்லை.
அதிகாரம் என்ற இரும்புச் சட்டத்தினாலேயே இணைக்கப்பட்டுள்ளது.
நடுவில் உள்ள நாம் இடைத்தரகர்கள்.
என்
மிதிவண்டி
என் புகை பிடிக்காத நண்பன்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காதவன்.
நானும் காற்றைச் சுவாசிக்கிறேன்.
அவனுக்கும் காற்று அவசியம்.
என் உழைப்பிற்கேற்ப
எங்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்வான்.
எனக்கு வீண் செலவு வைக்காத நண்பன்.
அவன் ரப்பர் பாதங்களை
கல்லும், முள்ளும் குத்திக் கிழிக்கும் பொழுது மட்டுமே
அவனுக்கு நான் வைத்தியம் செய்கிறேன்.
அவன் என்னை மட்டுமா சுமந்து செல்கிறான்.
என் நண்பனையும், உறவுகளையும்
மறுக்காமல் சுமக்கிறான்.
என் வழிகாட்டுதலிலேயே அவன் செல்கிறான்.
மேட்டில் ஏறும் பொழுது
அவன் சிரமப்படுவான்.
நானும் அவனோடு சேர்ந்து உழைப்பேன்.
பள்ளத்தில் பாய்ந்து செல்வான்.
நான் அவன் காதுகளைத் திருகி
மட்டுப்படுத்துவேன்.
யாராவது வழியில் குறுக்கிட்டால்
அவனைச் சுண்டினால் போதும்.
சத்தம் போட்டு விரட்டுவான்.
என் மிதிவண்டி என் பிள்ளைகளுக்கும் நண்பன்.
————அரங்க. குமார்