வாழ்க்கை (புதுக்கவிதை)
வாழ்க்கை என்பது
மலர்ப் பாதையன்று.
குளிர் சோலையன்று.
இனிப்பானதன்று.
வரவு மட்டுமன்று.
சேருதல் மட்டுமன்று.
இலாபம் மட்டுமன்று.
இன்பம் மட்டுமேயன்று.
ஆனால் வாழவேண்டும்.
—அரங்க. குமார்.
சென்னை– 49.
வாழ்க்கை (புதுக்கவிதை)
வாழ்க்கை என்பது
மலர்ப் பாதையன்று.
குளிர் சோலையன்று.
இனிப்பானதன்று.
வரவு மட்டுமன்று.
சேருதல் மட்டுமன்று.
இலாபம் மட்டுமன்று.
இன்பம் மட்டுமேயன்று.
ஆனால் வாழவேண்டும்.
—அரங்க. குமார்.
சென்னை– 49.
வெளிச்சம் (புதுக்கவிதை)
உள்ளம் இருண்டவர்களுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
சோம்பேறிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
வேசிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
கள்ளர்களுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
விஷமுள்ளவைகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
கொடிய விலங்குகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
வண்ணத்துப் பூச்சி போன்ற
சிலவற்றைத் தவிர
பூச்சிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
நல்லவை புரிய
வெளிச்சம் தேவை.
மனத்திலும் தான்!
— அரங்க. குமார்
சென்னை – 49.
அன்பு (புதுக்கவிதை)
அன்பு கண்களில்
தெரியலாம்;
மொழியினால்
வெளிப்படலாம்;
நடத்தையே சாட்சி!
—— அரங்க.குமார்.
சென்னை – 600 049.
வெண்ணிலாவும் விண்மீன்களும் ( புதுக்கவிதை )
விண்மீன்கள்
மாதமொரு அப்பத்தை
மெதுவாய்த் தின்னும்
எறும்புக் கூட்டம்.
வெண்ணிலவே !
உன்முகத்தில் உள்ள கறை
பருவத்தில்
உன் முகத்தில் பருக்கள்
தோன்றி மறைந்த கறையோ?
கோடிக்கணக்கில்
அனாதைக் குழந்தைகள்!
ஒரு கிண்ணத்தில்
பால் சோறு!
போதுமா?
வெண்ணிலவே!
நீயென்ன
அரசியல் தலைவியா?
இரவு முழுவதும்
கூட்டம் போடுகிறாய்.
சாப்பிட்டு முடித்து
வீட்டின் முன் வெட்டவெளியில்
பாய்விரித்துப் படுத்த கணவன்
பக்கத்தில் வந்தமர்ந்த
மனைவியிடம் கேட்டான்:
” ஏனடி! நேற்று நெல்லைத் தூற்றும்பொழுது
உன் ஒற்றைக் கல் மூக்குத்தி
தொலைந்து போனதாகச் சொன்னாயே!
மேலே வானத்தில் தெரிகிறதே! அதுவா பார்!
ஏனைய்யா? கீழே தொலைத்ததை
யாரேனும் மேலே தேடுவார்களா?
என்று கேட்டாள் மனைவி.
நீ மேலே பார்க்கும் பொழுது
அன்னப்பறவை தன் நீண்ட கழுத்தை
நிமிர்த்தி நிலவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது!
அதனால் தான் என்றான்.
நாலு எழுத்துப் படிக்காமலேயே
இவ்வளவு புகழ்கிறாயே!
நீ மட்டும் படித்திருந்தால்
பெரிய கவிஞனாகியிருப்பாய் ஐயா!
ஏற்றப் பாட்டும் இசைப்பாட்டும்
கூத்துப் பாட்டும் கும்மிப் பாட்டும்
நம் பாட்டனும் பூட்டனும்
படிக்காமல் கட்டினதுதானே!
உண்மைதான்! அவர்கள்
எழுதப்படாத பாட்டுகளுக்குச்
சொந்தக்காரர்கள் .
அவர்கள்
மண்ணோடு மண்ணாகிவிட்டாலும்
அவர்கள் பாட்டுக்கள் நிலைத்துவிட்டன.
என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் போனாள்!
அவன் ஆம்! ஆம்! என்று
பின்பாட்டு பாடிக்கொண்டு பின்னால் சென்றான்.
பின்பு அவள் பட்டபாட்டை
நாம் பாடவேண்டாமே!
நிலைவைக் காணவில்லை.
மேகம் மறைத்திருந்தது.
விண்மீன்கள் கண்ணடித்தன!
—– அரங்க. குமார்.
சென்னை – 600 049.
ஹைக்கூ கவிதைகள்
கடைசிச்சிரிப்பு
விழப்போகிறோம்
என்பது தெரிந்தும்
சிரித்துக்கொண்டிருந்தன மலர்கள்.
பனித்துளி
கருக்கலில்
புல்லின் தலையில்
மணிமகுடம்.
நதிகள்
பூமியின்
ரேகைகள்.
பட்டம்
வானத்தில்
படமெடுத்து ஆடும் நாகம்.
அருவி
இயற்கையன்னையின்
சேலை முந்தானை..
கவிஞன்
கவிதைகளைத்
கருத்தரிக்கும்
தாய்.
முத்தம்
காதலின்
முதல் அங்கீகாரம்.
எந்தக் கடையிலும்
வாங்கமுடியாத
விலையிலாப் பரிசு.
நாணம்
ஆசைக்கு பெண்கள் இடும்
தற்காலிகத் திரை.
மதிப்பு
அன்று
மனிதன்
தங்கத்துக்கு மதிப்பளித்தான்.
இன்று
தங்கம் இருந்தால் தான்
மனிதனுக்கு மதிப்பு.
பெயர் சூட்டுதல்
தன் மகளுக்கு
ஒரு குன்றின் மணி
தங்கம் வாங்க முடியாதவன்
தன் மகளுக்குத்
தங்கம் என்று பெயர் வைத்தான்.
கோட்டீஸ்வரன்
தன் குலதெய்வத்தின் பெயரால்
தன் மகனுக்கு
பிச்சைய்யா என்று பெயர் வைத்தான்.
மல்லிகை
அன்பின் தூதன்.
காதலரின்
சமாதானக் கொடி.
சிலை
சிற்பி
கல்லில் வேண்டாததை
செதுக்கித் தள்ளிய பிறகு
மீதமிருக்கும் கல்.
அது கதை சொல்லும்.
வரலாறு கூறும்.
தேன்
பூவின் எச்சிலை
வண்டு விழுங்கி
கூட்டில்
சேமிக்கும் எச்சிலின் மிச்சம்.
அலை
கடற் பெண்
நிலத்துக்கு அனுப்பும்
காதற்கடிதங்கள்.
முகவரி தெரியாததால்
திரும்பிச் செல்கின்றன.
புத்தகம்
சிலருக்குத்
தலையணை.
சிலருக்கு
ரயில் சிநேகிதம்.
சிலருக்கு
நண்பன்.
சிலருக்குக்
காதலி.
சிலருக்கு மனைவி.
சிலருக்குக்
குப்பை.
சிலருக்குப் பொக்கிஷம்.
——அரங்க. குமார்
சென்னை – 600049.
நிலாச் சோறு
பிள்ளைகள் ஒன்று கூடி
நிலாச்சோறு
ஆக்குகிற காலம் ஒன்றுண்டு.
ஒரு முழு நிலவு நாளில்
மூன்று நான்கு கற்களை வைத்து,
கொஞ்சம் சுள்ளிகள் வைத்து
அடுப்பு மூட்டி, சின்னஞ்சிறு பாத்திரம் ,
கொஞ்சம் அரிசி, சிறிது தண்ணீர்
என்று சேர்த்து அம்மா தினமும்
அடுப்படியில் செய்கின்ற சேவையினை
ஆர்வமுடன் விளையாட்டாய்
ஒத்திகைப் பார்க்கும் பெண்பிள்ளைகள்.
உடன் தம்பிகள் தங்கைகள் தோழிகள் என்று
ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு
விருந்தினரை உபசரிப்பது போல்
அவர்களுக்கு கழுவிய ஆலிலையிலோ
பூசணி இலையிலோ தாமரை இலையிலோ
கொஞ்சம் சோறு வைத்து
தங்களை அம்மாவாய் பாவித்துக் கொள்ளும்
பெண்பிள்ளைகள்.
நன்றாய் இருக்கிறதா என்று விசாரிக்க
“நன்றாய் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறதா?”
என்று கேட்க
இல்லை தீர்ந்து விட்டது என்று கூறும் பெண்பிள்ளைகள்.
அம்மா என்னவெல்லாம் சொல்வாளோ
எப்படியெல்லாம் பேசுவாளோ அவற்றையெல்லாம்
ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
செய்து பார்க்கும் ஒத்திகை.
நேரம் போவதே தெரியாமல்
விளையாடிவிட்டு
தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்பி
அம்மாவின் நினைவு வர
ஓடிப்போய் அம்மாவின்
மடியில் தலை சாய்த்துக் கொள்ளும் பிள்ளைகள்.
—– அரங்க. குமார்.
சென்னை – 600049.
நேருவும் காந்தியும் (புதுக்கவிதை)
நேரு ரோஜாவை அணிந்தார்.
காந்தி புன்னகையை அணிந்தார்.
பொதுவாழ்வில்
காந்திக்குத் தன் பிள்ளைகளை
வழிநடத்த நேரமில்லை.
காந்தி நம்மை நாமே
வழிநடத்திக் கொள்வோம் என்றார்.
அன்று
காந்தியுடன்
குழந்தை இந்திராவைப் பார்க்க முடிந்தது.
அன்று
யாருடனும்
காந்தியின் பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லை.
அவர் நினைத்திருந்தால்
போகும் இடமெல்லாம்
தன் பிள்ளைகளை அழைத்துச் சென்று
விளம்பரப்படுத்தி இருக்கலாம்.
என் வழித்தோன்றல் இவர்களென்று
கூறி இருக்கலாம்.
அவருக்கு அது தோன்றவில்லை.
நேரு
மாடி வீடு காற்று குடிசைக்கும் வீசும் என்றார்.
அவர் குடிசைக்கும் சென்றார்.
பெருமையாக இருந்தது.
காந்தி
அவர்களுடனேயே அவர்களாகவே வாழ்ந்தார்.
நேரு வெகு ஜனப் பிரியன்.
காந்தி ஹரிஜனப் பிரியன்.
காந்தி கிராமங்களை
வளர்க்கப் பார்த்தார்.
நேரு கிராமத்துச் சாலைகள்
நகரத்தை நோக்கிப் பயணப்படட்டும் என்றார்.
காந்தியின் பின்னால் நேரு நின்றார்.
நேருவின் வாரிசுகளுக்குப் பின்னால்
காந்தியின் பெயர் இருக்கிறது.
நேருவின் அன்பு நேர்மையானது.
காந்தியின் அன்பு தூய்மையானது.
எளிமையாய் வாழ்வதற்கு
கைராட்டைப் போதுமானது.
கைராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தால்
எல்லோருக்கும் நூற்று முடியாது
என்று நேரு
மேனாட்டு அறிவியலை
கீழை நாட்டுக்குக் கொண்டுவந்தார்.
காந்தி இன்றையப் பொழுதினைப் பார்த்தார்.
நேரு நாளையப் பொழுதினைப்பற்றி யோசித்தார்.
காந்தி சிக்கனவாதி.
நேரு வரவினைப் பெருக்குவோம் என்றார்.
காந்தி தன் மனதை சுயபரிசோதனை
செய்து கொள்பவர்.
நேருவுக்கு நேரமில்லை.
நேருக்கள் போன்றோர் நிறைய வருவார்கள்.
காந்தியைப் போல் வாழ்பவர் மிக அரிது!
—–அரங்க. குமார்
சென்னை – 600 049.
விமர்சனம் (புதுக்கவிதை)
உன்னை
இப்படி விமர்சிக்கிறார்களே !
உனக்கு வருத்தமாக இல்லையா?
என்று ஒருவன் கேட்டதற்கு
அவன் சொன்னான்.
படிக்கப்படாதப் பாட்டைவிட
கிழிக்கப்படுவது
எவ்வளவோ மேல்! என்று.
—–அரங்க. குமார்
சென்னை – 600 049.
சீதாராமன் (புதுக்கவிதை)
நகரவாசி இராமனை
அயோத்தி மாநகரம்
அழுதுகொண்டே அனுப்பிவைத்தது.
வனவாசி இராமனுக்கு
வானமே கூரை ஆனதால்
எல்லைகள் அற்றுப்போனதால்
வானமும் வசப்பட்டது!
வையமும் வசப்பட்டது!
இராமன்
அயோத்தி இராமனாக மட்டுமிருந்தால்
நாட்டைப் பார்த்திருக்க வேண்டும்;
மக்களைப் பார்த்திருக்கவேண்டும்;
அயோத்திராமன்
சீதையை மட்டுமே பார்த்திருந்தான்;
அன்பு வளர்ந்தது.
சீதாராமன் ஆனான்!
வனவாசி ராமன்
சீதைக்காக வாழ்ந்திருந்தான்.
சீதையின் ஆசையை நிறைவேற்ற
மானைத் துரத்தினான்.
மானைக்கொன்றான்.
பெண்மானை இழந்தான்.
சீதைக்காக அழுதான்; புலம்பினான்;
தவித்தான்; கலங்கினான்;
தன்னைப் போலவே
நாட்டையும் மனைவியையும்
இழந்து தவித்த சுக்ரீவனிடம் நட்புகொண்டான்;
அவனுக்காக வாலியைக் கொன்றான்;
சீதைக்காக
இலங்கை மீது போர்தொடுத்தான்;
வென்றான்;
வீடு திரும்பினான்;
காட்டினில் அவன் வாழ்ந்த
பதினான்கு வருடங்களும்
சீதாராமனாகவே வாழ்ந்தான்;
இராஜாராமன் ஆனபொழுது
இராஜதர்மம் குறுக்கிட்டது;
இராஜ நியதிகள் குறுக்கிட்டன;
மக்களுக்காக வாழ்ந்தான்;
மக்களின் கோணத்தில் யோசித்தான்;
மனைவியைப் பிரிந்தான்;
மனையறம் துறந்தான்;
இல்லறம் வாழ்பவர்கள்
சீதாராமனைப் பின்பற்றவேண்டும்.
கானகம் செல்லவேண்டிய தேவையில்லை;
நல்லாட்சி செய்ய விரும்புபவர்கள்
இராஜாராமனைப் போல் வாழவேண்டும்;
மக்களுக்காக வாழவேண்டும்;
தம்
மனைவி மக்களுக்காக அன்று;
——–அரங்க. குமார்.
சென்னை – 600 049.
“இங்கே உட்கார்ந்து கொண்டு இரும்மா
உனக்கு நான் டிபன் வாங்கிக் கொண்டு
வருகிறேன்” என்று தாயை
சித்தூரில் தொலைத்துவிட்டு
செங்கல்பட்டு வந்து விட்ட மகனிடம்
அவன் மனைவி
அழுது கொண்டே சொன்னாள்
” நம் நாய் ஜிம்மியைக் காணோம்” என்று.
“அவன் எங்காவது போயிருப்பான்.
தானாய் வந்துவிடுவான்” என்ற கணவனிடம்
“அவனை நான் நாயாகவா வளர்த்தேன்.
என் சொந்தப் பிள்ளையைப் போலல்லவா வளர்த்தேன்”
என்று அழுதாள்.
“கவலைப்படாதே! அவனைக் கண்டுபிடித்து
கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000/- பரிசு
என்று இந்த ஊர் முழுவதும்
அறிக்கை ஒட்டிவிடுகிறேன்”
என்றான் பாசமுள்ள கணவனாக.
——- அரங்க. குமார்.
சென்னை – 600049.