நம்பிக்கை மரம் [ புதுக்கவிதை ]
கடந்து செல்லும்
மேகங்களைக் குறித்துக்
கவலைப் படவேண்டாம்.
மழை தரும் மேகங்கள்
வந்து கொண்டுதான் இருக்கும்.
காத்திருத்தல் கொடுமையானது.
காத்திருந்தால் இனிமையாகும்.
பயிர்கள் நம் நிழலில் வளர்பவை.
தினந்தினம் சீராட்டவேண்டும்.
மரங்கள் நமக்கு
நின்று பலன் தருபவை.
நம் பாட்டன் மரம் வளர்த்திருந்தால்
நாம் நிழலில் இருப்போம்.
நாம் மரம் வளர்த்தால்
நம் தலைமுறை நிழலில் இருக்கும்.
மழை தரும் மேகங்கள் வரும்வரை
நாம் மரங்களை நட்டுவிட்டு
காத்திருப்போம்.
மரங்களைக் காத்திருப்போம்.
மரங்கள் நம்பிக்கையானவை!
----- அரங்க. குமார்
சென்னை- 49.
வாழு! வாழவிடு! [ புதுக்கவிதை ]
[ குறிப்பு]:
உண்மை நிலை! படித்துவிட்டு மறந்துவிடுங்கள் !]
இலஞ்சம்
கௌரவத்தின் அடையாளம்.
இலஞ்சத்தின் அளவு
அதிகாரத்தின் உயர்வைக் கட்டுகிறது.
இலஞ்சம் வாங்கும் ஊரில்
இலஞ்சம் வாங்காதவன்
ஒப்புரவு ஒழுகாதவன்!
இலஞ்சத்தை ஒழிக்க நினைப்பவர்கள்
மற்றவர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத
அழுக்காறு உடையவர்கள்.
இலஞ்சம் வாங்காதவர்கள்
எண்ணிக்கையில் சிறுபான்மையினர்!
கட்சியின் பெரும்பான்மையைக் கோரும்
பாராளுமன்றமே!
எங்களின் பெரும்பான்மையைக் கருதி
எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று
இலஞ்சம் வாங்குவதை சட்டமாக்கு!
இலஞ்சம் வாங்குவதில்
உச்சவரம்பு கூடாது!
இலஞ்சத்தை வெறுப்போரே!
வாழுங்கள்! வாழவிடுங்கள்!
----- அரங்க. குமார்
சென்னை- 600049.
ஆனால்... ... வாழ வேண்டும்.[ புதுக்கவிதை]
வாழ்க்கை என்பது;
மலர்ப்பாதையன்று;
குளிர் சோலையன்று;
இனிப்பானதன்று;
வரவு மட்டுமன்று;
சேருதல் மட்டுமன்று;
இலாபம் மட்டுமன்று;
ஆனால்... ... வாழவேண்டும்.
..... அரங்க. குமார். சென்னை- 600 049.
என்ன செய்யப் போகிறாய்?
ஆண்டவனே! எங்கள் பெயர் எழுதப்பட்ட
அரிசி மூட்டைகளை
பக்கத்து மாநிலங்களுக்குக்
கடத்துகிறார்களே!
இவர்களை
என்ன செய்யப் போகிறாய்?
----- அரங்க குமார்
சென்னை - 600 049.
நிலா ஒருநாள் காணாமல் போனால்
என்ன ஆகும்?
அமாவாசை என்பார்கள்.
பலநாள் காணமல் போனால்
அனைவரும் யோசிப்பார்கள்.
விஞ்ஞானிகள்
சூரிய குடும்பத்திலிருந்து
புளுட்டோ விலகியது போல்
நிலாவும் விலகிப் போய்விட்டது
என்பார்கள்.
சாதரண மனிதர்களாய் யோசிப்போம்!
நிலா
காலம் காலமாய்
காதலர்களுக்குப் பிரியமானவன்!
கணவனுக்கு
காதல் மனைவி
கட்டிலில் நிலா!
மேகம் மூடியும் இருக்கும்!
மேகம் விலகியும் இருக்கும்!
கவிஞர்களுக்கு நிலா
கற்பனை தரும்
கற்பகத் தரு!
நிலைவைப் பற்றி
எழுதாத கவிஞர்கள்
அரிது!
உலகில் நிலா பற்றிய
கவிதைகளின் எடையும்
நிலவின் எடையும்
சமமாக இருக்கும்!
துன்பத்தில்
நிலா தேவை இல்லை!
இன்பத்தில்
நிலா தேவை!
குழந்தைக்கு
அம்மா தேவை!
அம்மாவுக்கு நிலா தேவை
குழந்தைக்குச் சோறூட்ட...
நிலா காணாமல் போனால்
வானம் வெறிச்சோடிப் போகும்!
இழவு விழுந்த வீட்டைப் போல
களையிழந்து காணப்படும்.
எப்பொழுதும்
உடனிருக்கும்
தாத்தா பாட்டிகளைப் பற்றி
நாம் யோசிப்பதில்லை!
ஒருநாள்
அவர்கள் இல்லை என்றாகும்பொழுது
அழுகிறோம்!
நிலாவும் அதுபோலத்தான்.
நிலா எங்கும் போகவில்லை!
அங்கேயேதான் இருக்கிறது!
ஒரு நினைவூட்டல்!
நிலா
அழகு குன்றாத
முதுகிழவி!
எத்தனையோ
தலைமுறைகளைப்
பார்த்துக்கொண்டு
புன்னகை மாறாமல் இருக்கிறாள்!
அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை!
நிலா அழகு!
கோபம் கொள்ளத்தெரியாத
பெண்ணைப் போல நிலா அழகு!
நிலவு சுடுவதில்லை!
—– அரங்க குமார்
சென்னை – 600 049.
கண்ணுறங்கும் வேளையிலே
நெஞ்சுறங்க மருந்து!
—அரங்க. குமார்
சென்னை – 600 049.
அட நாயே!
நீ இந்த
ஏழைக் குடிசையில்
எதைக் காப்பாற்ற
இரவெல்லாம் குரைக்கிறாய்?
உனக்குச் சோற்றைப் போட்டதற்கு
எங்களுக்கு இருக்கின்ற
ஒரேசொத்தான
தூக்கத்தையும் அல்லவா
கொள்ளை போகவிடுகிறாய்!
என்று
நாளெல்லாம் உழைத்துக்
களைத்துப் படுத்திருந்த
அந்த கூலிக்காரன் புலம்பினான்!
—-அரங்க. குமார்
சென்னை- 600 049.
அரசியல்வாதிகள்
மண்புழுக்கள்!
பிறந்த மண்ணைத்
தின்றுகொண்டேயிருப்பார்கள்!
—– அரங்க. குமார்
பனிப்போர்வையடி உன்னுருவம் – உன்னைப்
பார்த்தாலே மற்றவைகள் மங்கிப்போகும்;
தனிப்பார்வையடி உன்பார்வை – வெம்மை
தணியாதோ தகிக்கிறதே செங்கதிராய்!
கனிக்கோவையடி உன்னிதழ்கள் – கிளி
கண்டாலே கொத்திடுமே கவனங்கொள்க!
தமிழ்ப்பாவையடி நீயெனக்கு – என்னைத்
தருவேனே கவியெனவே மறுத்திடாதே!
விழிப்பார்வையிலே கொன்றுவிட்டு – உயிர்
மீட்டிடுவாய் புன்னகையால்
கவிப்பார்வையிலே பிரமனும்நீ – கொடுங்
காலனும்நீ என்றுரைப்பேன்;
நிலவெனவும் கதிரெனவும் – உன்
நீள்விழிகள் மாறுவதேன்?
குலவுகிற நேரமிது – உனக்குக்
குடைப்பிடிக்க நேரமில்லை!
களவெனவும் கற்பெனவும் – தொல்
காப்பியத்துள் கண்டதடி!
உளந்தனிலே புரியவில்லை! – நீ
ஓர்நொடியில் புரியவைத்தாய்.
கற்றுத் தெளிவதில்லை காதல்!
கல்லாமல் கற்பதுவே!
கற்றபின் மறப்பதில்லை காதல்!
காலமெல்லாம் கூடவரும்!
—அரங்க. குமார்
கடந்த காலம் ( புதுக்கவிதை )
கடந்தகாலம் மீட்கமுடியாதது.
நினைவுப் பேழையில்
பதிவாகி இருந்தால்
மனத்தைப் பின்னோக்கிச்
செலுத்திப் பார்க்கலாம்.
அதில்
மோசமான துன்பங்கள்
பதிவாகி இருக்கும்.
மிகவும் இன்பமான விஷயங்கள்
பதிவாகி இருக்கும்.
சாதாரண சம்பவங்கள்
மனதின் அடித்தட்டில்
சென்றுவிடும்.
மனம் கணினியை விட
வேகமானது.
நாற்பது வருடங்களுக்கு
முன் நடந்த சம்பவமானாலும்
அடுத்த நொடியே
நினைவிற்கு வரும்.
கணினி
நாற்பது வருடங்களுக்கு முன்
நீ காதலில் தோல்வியுற்றாய்
என்ற விவரத்தைத் தரும்.
மனமோ
அன்று ஏற்பட்ட வலியைக்
காண்பிக்கும்.
ஆனால் கடந்தகாலம்
மீட்க முடியாதது.
தினமும்
நாம் சம்பாதிக்கிறோம்
என்று நினைக்கலாம்.
ஆனால்
நம்மை இழந்துகொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நொடியும்
நம்மை விட்டுப்
போய்க்கொண்டு இருக்கிறது.
அதனால்
ஒவ்வொரு நொடியும்
ஆண்டவனை நினைப்போம் என்று
ஆன்மிகவாதி சொல்லுகிறான்.
எனக்கு
ஒவ்வொரு நொடியும்
விலைமதிப்பில்லாதது என்று
விஞ்ஞானி சொல்கிறான்.
எனக்கு
ஒவ்வொரு நொடியும்
ஒருகோடி என்று
கோட்டீஸ்வரன் சொல்கிறான்.
ஒவ்வொரு நொடியும்
என் கொள்கையே சிறந்தது என்று
தலைவன் சொல்கிறான்.
ஒரு நொடிகூட
விட்டுப் பிரியலாகாது என்று
காதலர்கள் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு நொடியும்
முன்னேற வேண்டுமென்று
வெற்றிவீரன் சொல்கிறான்.
ஆனால்
நாம் பின்னோக்கிப்
பயணமாகிக் கொண்டிருக்கிறோம்.
ஆம்!
நாம் கடந்த காலமாகிக் கொண்டிருக்கிறோம்!
அதனால்
எப்பொழுதும்
செயல்பட்டுக் கொண்டே இரு.
ஒவ்வொரு நொடியும் கடந்தகாலமே!
— அரங்க . குமார்
சென்னை – 49.
Posts navigation
Just another WordPress site