பார்வை [ புதுக்கவிதை ]

பார்வை [ புதுக்கவிதை ]

 

வண்டிக்காரா!

உன் மாட்டு வண்டியின்

க்ரீச் க்ரீச் என்ற சத்தமும்

சக்கரங்களின் கடகட சத்தமும்

காளைகளின்

கழுத்து மணிச்சத்தமும்

எனக்கு ஆனந்தமாயிருக்கிறது 

உனக்கு என்று கேட்டேன்.

 

அட! மாட்டு வண்டியென்றால்

நாலு சத்தம் கேட்கத்தான் செய்யும்.

நான் இதையெல்லாம் யோசிப்பதில்லை.

அச்சாணிக்கு வண்டிமை போடவில்லை.

சத்தம் போடுகிறது. 

மாட்டுப் பொங்கலுக்கு

மாடுகளுக்கு மணி கட்டினோம்.

இன்னும் கழற்றவில்லை.

எங்களுக்கு

இதையெல்லாம் யோசிக்க நேரமேது தம்பி

என்றான்.

 

உண்மை தானே!

இது இவன் பார்வை.

 

குயில் கூவுவதையும்

மயில் ஆடுவதையும்

கவிஞர்கள்  பாட்டில் வைப்பார்கள்.

இது அவர்கள் பார்வை.

 

உழவனுக்கும்

உழைப்பாளிக்கும் ஏது நேரம்?

 

கவிஞர்கள்

ஓவியர்கள்

இசைவாணர்களின் உலகம் தனி.

அவர்களை மதிக்க வேண்டும்.

 

ஆனால்

உழைப்பாளிகளைக் கும்பிடவேண்டும்.

                                                ———— அரங்க. குமார்

                                                                     சென்னை – 600 049.

 

 

 

 

பாதி மனிதன் [ புதுக்கவிதை ]

 

பாதி மனிதன் [ புதுக்கவிதை ] 

காலைச் சுற்றி சுற்றி வருமே

என்பதற்காக

பூனைக்குப் பால்வார்க்காத மனம்.

 

ஊருக்குப் போய்விட்டால்

பார்த்துக்கொள்ள முடியாது

என்பதற்காகவே

அனாதையாக்கப்பட்டுவிட்ட

வீட்டு நாய்.

 

பணியில் இருக்கும்போது

இன்றைக்கு

சிரித்து வைத்தால்

நாளைக்கு முறையில்லாத வழியில்

உதவி கேட்டு வந்துவிடுவானோ

என்று விறைப்பாக வைத்துக்கொள்ளும்

முகம்.

 

தியாகிகளுக்கு

தீபமேற்றினாலும்

எதையும் தியாகம் செய்ய விரும்பாத

மனம்.

 

வழியில்

தடைக்கல் இருந்தால்

அதை யாரேனும்

அகற்றிப் போடுவார்களா  நாம்

பாராட்டலாம் என்னும் மனம்.

 

இவைதாம்

ஒருமனிதன்

முழு மனிதனாகத்

தடைக்கல்லாயிருப்பவை!

 

                               ————- அரங்க. குமார்

                                               சென்னை – 600 049

மாய உலகம் [ புதுக்கவிதை ]

மாய உலகம் [ புதுக்கவிதை ]

 

இதழையும்

இடையையும்

நடையையும்

சாதாரண கண்களாயிருந்த

சனங்களின் கண்களை

எக்ஸ்ரே கண்களாக்கிவிட்ட

அரிய சாதனம்.

 

பத்து வயதுப் பையனின்

சிந்தனையைத் தூண்டும் பள்ளியறை.

 

கொலை கொள்ளை கற்பழிப்பு

ஆகியவற்றை

செய்முறை விளக்கத்தோடு காண்பித்து

இவை தவறானவை

என்று முடிவு எழுதும்

ஆய்வுக்கூடம்.

 

காந்தியையும்

சம்பல் கொள்ளைக்காரியையும்

மக்கள் முன்னே நிறுத்திய

நியாயத் தராசு.

 

மனிதர்களைதெய்வ மாக்கிய

மாய உலகம்.

            ———–அரங்க. குமார்

                         சென்னை – 600 049.

எதிர்பார்ப்புகள் [ புதுக்கவிதை ]

எதிர்பார்ப்புகள் [ புதுக்கவிதை ]

 

ஒவ்வொரு செயலுக்கும்

அங்கீகாரத்தை

எதிர்பார்த்ததில்

துன்பமே மிஞ்சியது.

 

சிலர் இனிக்கிறதென்றார்கள்.

துள்ளிக் குதித்தேன்.

சிலர் புளிக்கிறதென்றார்கள்.

முகம் சுளித்தேன்.

 

ஆனால்

காய்த்துப் புளித்து

பிறகு இனிக்கும்

என் வீட்டு

மாமரமோ

எதைப் பற்றியும் கவலைப்படாமல்

ஓங்கி வளர்ந்து நின்றது.

 

கல்லால் அடிபடுவது

அம்மாமரத்துக்குப் புதிதல்ல;

கல்லால் அடிபட்ட மாமரத்தின்

மாவிலைகள் தோரணமாயின.

எனக்குப் பாடமாயின.

                                 ————- அரங்க. குமார்.

                                                சென்னை – 600049

சேலைப் பெண்ணே!(புதுக்கவிதை )

சேலைப் பெண்ணே!

துணிக்கடையில்

வண்ணங்களில் எண்ணம்

தொலைக்கும் பெண்ணே!

சேலையை எடுப்பதற்கு

ஏன் இவ்வளவு

மெனக்கெடுகிறாய்

என்று யோசித்தேன்.

இந்த வண்ணச்சேலையில்

உன் எண்ணம் புரிகிறது.

சேலை

உன் இடையைச் சுற்றி சுற்றி

ஆசை தீராது

உன்மேல் படர்ந்து

உன் பின்னலோடு

போட்டிப் போட்டு

உன் பின்னழகைத் தொடுகிறது.

சேலைக்குத்தான் உன்மேல்

எவ்வளவு இச்சை அதிகம்.

அதைவிட சேலையில்

உன்மேல் எனக்கு இச்சை அதிகம்.

—————அரங்க. குமார்
சென்னை – 600049

தற்கொலை [ புதுக்கவிதை ]

தற்கொலை [ புதுக்கவிதை ]

சாகும்படி
எந்த சாத்திரமும் சொல்லவில்லை.
கல்லடிபட்டும்
நாய் தற்கொலைக்குத் துணிவதில்லை.
வயதாகி
பாரம் இழுக்க முடியாமல் நின்றுவிடும்
மாடுகளின் ஆசனவாயில்
குச்சியால் குத்துகிறான் வண்டிக்காரன்.
மாடுகளும் தற்கொலைக்குத் துணிவதில்லை.
ஆண்டவனும் எல்லோராலும் நேசிக்கப்படவில்லை.
அறிவாளி என்பவன் ஒருவனில்லை.
நான்கு பேர்கள் சொல்வதினால்
ஒருவன் அறிவாளியாவதில்லை.
நான்குபேர்கள் சொன்னதினால்
ஒருவன் முட்டாளாய் ஆவதில்லை.
பொய் என்றும் நிரந்தரமானதில்லை !
உலகில் நீ தனியானவன் இல்லை.
யோசிக்கத் தெரிந்த மனிதனே
தற்கொலை தேவையில்லை.

—————அரங்க. குமார்
சென்னை – 600049

யாரை நம்புவது? [ புதுக்கவிதை ]

 

யாரை நம்புவது? [ புதுக்கவிதை ]

தகப்பன் பாசமறியாத

கோழிக் குஞ்சுகளே!

தாயை அறிவீர்கள்.

அவளும் ஒருநாள்

உங்களைக் குத்தி விரட்டுவாள்.

யாரை நம்பி வளர்கின்றீர்கள்.

ஆண்டவனை நம்பியா?

மனிதனை நம்பியா?

என்று நான் கேட்டேன்.

நாங்கள் ஆண்டவனையும் நம்பவில்லை.

மனிதர்களையும் நம்பவில்லை.

மனிதன் ஆண்டவன் பெயரைச்

சொல்லியல்லவா எங்களை அறுக்கின்றான்

என்றன.


                       ---------------அரங்க. குமார் 
                                   சென்னை - 600049

எண்ணங்கள் [ புதுக்கவிதை]

எண்ணங்கள் [ புதுக்கவிதை]

மனதை

இரும்பாக்கி  இளகவைத்து

கரும்பாக்கிக் கசக்க வைக்கும்

இரசவாத எண்ணங்களே!

உங்களை

எனதாக்கிக் கொண்டுவிட்டால்

வசமாகும் உள்ளங்களே!

—————அரங்க. குமார்
சென்னை – 600049

காதலும் கவிதையும்

            காதலும் கவிதையும்(புதுக்கவிதை )

 

மரத்தை உலுக்கி

தென்றலை

வரவழைக்க இயலாது!

தன்னிச்சையாய் வருவதே

காதலும் கவிதையும்.

    —————அரங்க. குமார்
                                                                                          சென்னை – 600049